`வேதாந்தாவுக்கு எதிரான போராட்டத்தில் இருவர் உயிரிழப்பு, 40 பேர் படுகாயம்!' - பதற்றத்தில் ஒடிசா | Two dead and several injured after police lathicharged protesters at Vedanta Aluminium Plant

வெளியிடப்பட்ட நேரம்: 17:26 (19/03/2019)

கடைசி தொடர்பு:17:26 (19/03/2019)

`வேதாந்தாவுக்கு எதிரான போராட்டத்தில் இருவர் உயிரிழப்பு, 40 பேர் படுகாயம்!' - பதற்றத்தில் ஒடிசா

வேதாந்தா குழுமத்துக்குச் சொந்தமான அலுமினியச் சுத்திகரிப்பு ஆலை, ஒடிசாவில் லான்ஜிகர் பகுதியில் 250 ஏக்கரில் அமைந்துள்ளது. இந்த ஆலைக்கு எதிராக உள்ளூர் மக்கள் வேலைவாய்ப்பு வழங்கக்கோரித் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

வேதாந்தா

PC - ANI

இந்த நிலையில் சுமார் 40-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள், ஆலையின் பிரதான வாயிலில் நேற்று தர்ணாவில் ஈடுபட்டிருந்தனர். அவர்களை ஓ.ஐ.எஸ்.எப் வீரர்கள் அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது போராட்டக்காரர்கள் ஆலைக்குள் நுழைந்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் கூட்டத்தைக் கலைக்க காவல்துறை தடியடி நடத்தியது. இந்தத் தடியடியில் இரண்டுபேர் உயிரிழந்துள்ளனர். 40 பேர் காயமடைந்திருக்கிறார்கள். காயமடைந்தவர்கள் லான்ஜிகர் மற்றும் விஸ்வானந்த்பூர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.  

இதைத் தொடர்ந்து அங்குப் பதற்றமான சூழல் நிலவி வருவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆலைக்குச் செல்லும் சாலைகளில் பலத்த காவல்துறைப் பாதுகாப்பு போடப்பட்டு சோதனை செய்யப்படுகின்றன. 

வேதாந்தா

PC - ANI

மேலும், ஒடிசாவின் நியமகிரி மலைப்பகுதியில் பாக்ஸைட் தாதுவை வெட்டியெடுக்க இதே வேதாந்தா குழுமம் பல ஆண்டுகளாக முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதை எதிர்த்து, அந்தப் பகுதி பழங்குடி மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியவர்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு 13 பேர் பலியானதும் குறிப்பிடத்தக்கது. தற்போது தூத்துக்குடியைப் போலவே,  ஒடிசாவிலும் நிகழ்ந்திருக்கின்ற சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.