2009 தேர்தல்... வெற்றி தோல்விகளை தீர்மானித்த தே.மு.தி.க! | DMDk plays major role in 2009 Lok sabha election

வெளியிடப்பட்ட நேரம்: 20:15 (19/03/2019)

கடைசி தொடர்பு:12:16 (25/03/2019)

2009 தேர்தல்... வெற்றி தோல்விகளை தீர்மானித்த தே.மு.தி.க!

 

தே.மு.தி.க

2009 நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகத்தில் 4 முனைப் போட்டி நிலவியது. அ.தி.மு.க கூட்டணி 12 இடங்களிலும், தி.மு.க கூட்டணி 27 இடங்களிலும் வென்றது. தனித்துப் போட்டியிட்ட தே.மு.தி.க எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை. ஆனால், பெருமளவில் வாக்குகளைக் குவித்தது. இதனால், பல தொகுதிகளில் வெற்றிபெற்ற கட்சிக்கும், அடுத்து இரண்டாவது இடம் பிடித்த கட்சிக்கும் இடையே வாக்கு வித்தியாசம் மிகக் குறைவாகவே இருந்தது.

விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளரும், தேனியில் காங்கிரஸ் வேட்பாளரும் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றிபெற்றார். திருச்சியில் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் குமார், வட சென்னையில் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், விருதுநகரில் போட்டியிட்ட மாணிக் தாகூர், காஞ்சிபுரத்தில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விசுவநாதன், சிவகங்கையில் ப.சிதம்பரம் ஆகியோர் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றிபெற முடிந்தது. 

தே.மு.தி.க பெரும்பாலான தொகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டுகளை வாங்கிக் குவித்து, மூன்றாம் இடம்பிடித்தது. மொத்தமாக 31.26 லட்சம் ஓட்டுகளைப் பெற்று 10.08 சதவிகித வாக்குகளைப் பெற்றது. கள்ளக்குறிச்சியில் சுதீஷ் 1,32,223, விழுப்புரத்தில் கணபதி 1,27,476, விருதுநகரில் பாண்டியராஜன் 1,25,229 வாக்குகளைப் பெற்று பெரிய கட்சிகளையே கலகலக்கவைத்தனர். திருவள்ளூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், சேலம், விருதுநகர், ஆரணி, விழுப்புரம், தருமபுரி ஆகிய 9 தொகுதிகளில் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை வாரிக் குவித்தது.

வைகோ, தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தா.பாண்டியன், சாருபாலா தொண்டைமான், பிரபு, மணிசங்கர் அய்யர் ஆகியோரின் வெற்றியைத் தட்டிப்பறித்ததோடு, தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரண்டு திராவிடக் கட்சிகளின் வெற்றி தோல்வியைத் தீர்மானித்தது தே.முதி.க. அனைத்துத் தொகுதிகளிலும் வாக்குகளை வாரிச் சுருட்டியதால், 25 தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக தே.மு.தி.க மாறியது. 

தே.மு.தி.க வேட்பாளர்கள் பிரித்த ஓட்டுகளால் அ.தி.மு.க கூட்டணி 13 இடங்களிலும், தி.மு.க கூட்டணி 11 இடங்களிலும், பி.ஜே.பி கூட்டணி ஓர் இடத்திலும் வெற்றி வாய்ப்பைப் பறிகொடுத்தன. இதில், அதிகபட்சமாக அ.தி.மு.க வேட்பாளர்கள் 8 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் 2 இடங்களிலும் ம.தி.மு.க ஓர் இடத்திலும், பா.ம.க 2 இடங்களிலும் தோல்வியைத் தழுவின. தி.மு.க கூட்டணியைப் பொறுத்தவரை தி.மு.க வேட்பாளர்கள் 3 இடங்களிலும், காங்கிரஸ் வேட்பாளர் 7 இடங்களிலும், விடுதலைச் சிறுத்தைகள் ஓர் இடத்திலும் தோற்றுப்போனார்கள்

நீங்க எப்படி பீல் பண்றீங்க