களைகட்டும் `கரு’ கடத்தல்! - இந்திய ஐவிஎஃப் மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யும் மலேசிய நெட்வொர்க் | Malaysian held for trying to embryo smuggling

வெளியிடப்பட்ட நேரம்: 21:04 (19/03/2019)

கடைசி தொடர்பு:21:04 (19/03/2019)

களைகட்டும் `கரு’ கடத்தல்! - இந்திய ஐவிஎஃப் மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யும் மலேசிய நெட்வொர்க்

இந்தியாவில் குழந்தையின்மைக்கு சிகிச்சை அளிக்கும் ஐவிஎஃப் மருத்துவமனைகளின் எண்ணிக்கை கடந்த சில வருடங்களில் கணிசமாக அதிகரித்துள்ளது.

கரு

ஐவிஎஃப் சிகிச்சை முறை (இன்பிட்ரோ ஃபெர்டிலைசேஷன்) குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத தம்பதிகளுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது. ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரையில் சமூகத்தின் அனைத்துப் படிநிலை மக்களாலும் இந்த சிகிச்சை முறையைப் பயன்படுத்திக் கொள்ள முடியாது. காரணம் இந்த சிகிச்சைக்காக சில லட்சங்களை செலவு செய்ய வேண்டியிருக்கும். ஆனால், சில லட்சங்கள் என்பது வெளிநாட்டவருக்கு மிகவும் சாதாரண விஷயம். இந்திய ஐவிஎஃப் மருத்துவமனைகளைத் தேடி வெளிநாட்டவர்கள் படையெடுக்கத் தொடங்கியிருக்கின்றனர். கூடவே சட்டவிரோதமான நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளன.

மலேசியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் மனிதக் கருவை இந்தியாவுக்குக் கடத்த முயன்று, மும்பை விமான நிலையத்தில் வசமாக மாட்டிக் கொண்டார். அவர் கொடுத்த வாக்குமூலம் அனைவரையும் அதிர வைத்துள்ளது. கடந்த 15 ம் தேதி, டி.ஆர்.ஐ அதிகாரிகள் மலேசியாவைச் சேர்ந்த பார்த்திபன் துரை என்பவரிடம் நடத்திய சோதனையில் நைட்ரஜன் நிரம்பிய பையில் மனிதக் கரு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த பதப்படுத்தப்பட்ட கரு, பாந்த்ராவில் உள்ள பிரபல இந்தோ நிப்போன் IVF மருத்துவமனைக்கு கடத்தி வரப்பட்டது என்னும் திடுக்கிடும் தகவலை வெளியிட்டார். கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இதுபோன்று 10 பார்சல்களை கடத்தி வந்து இந்தோ நிப்போன் மருத்துவமனைக்கு டெலிவரி செய்திருப்பதாகவும் திடுக்கிடும் உண்மையைத் தெரிவித்திருக்கிறார்.

பதப்படுத்தப்பட்ட கரு

மலேசியாவில் இதற்காக ஒரு தனி நெட்வொர்க் செயல்பட்டு வருகிறதாம். அவர்களின் வேலையே இந்திய மருத்துமனைகளுக்குக் கருமுட்டை, கரு உள்ளிட்டவற்றைச் சட்டவிரோதமாகக் கடத்துவதுதான் என்று பார்த்திபன் தெரிவித்துள்ளார். ஐவிஎஃப் சிகிச்சையில், செயற்கைமுறையில் சோதனைக்குழாயில் கருத்தரிப்பு செய்து அதைக் கருப்பைக்கு மாற்றி கருப்பையில் குழந்தையை வளரச்செய்வார்கள். சில மருத்துவமனைகள் சட்டவிரோதமாகப் பதப்படுத்த கருவையும் இந்த சிகிச்சைக்குப் பயன்படுத்துவார்கள். பார்த்திபன் துரை கடத்தி வந்த பதப்படுத்தப்பட்ட கரு, பணக்காரர் ஒருவருக்காக, இந்திய வாடகைத் தாயின் கருவறைக்கு மாற்றப்பட இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகித்துள்ளனர். மேலும் பார்த்திபனின் மொபைலில் இந்தோ நிப்போன் மருத்துவமனை முகவரி, தொலைபேசி எண்கள் உள்ளிட்டவை இருந்தன.

பார்த்திபன் துரையை வைத்து இந்தக் கடத்தலில் சம்பந்தப்பட்ட பெரிய புள்ளிகளைப் பிடிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். அவரிடம் ``நீங்கள் யாருக்காகக் கடத்தி வந்தீர்களோ, அவரைத் தொடர்பு கொண்டு நீங்கள் மும்பை வந்திறங்கிவிட்டதாகச் சொல்லுங்கள்’’ என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பார்த்திபன், இந்தோ நிப்பான் மருத்துவமனையின் இணை இயக்குநர் கோரல் காந்திக்குத் தகவல் கொடுத்து கருவை வந்து பெற்றுக் கொள்ளும்படி சொன்னார். ஒரு நட்சத்திர ஹோட்டலில் வைத்து பரிமாற்றம் நடந்தது. அனைத்தையும் அதிகாரிகள் கண்காணித்தபடி இருந்தனர்.  

கோரல் காந்தி

இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட இந்தோ நிப்போன் மருத்துவமனைக்கு டிஆர்ஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். அந்த மருத்துவமனையின் இணை நிறுவனர் கோரல் காந்தி இந்த விவகாரத்தை நீதிமன்றத்தில் சந்திப்பதாகக் கூறி திங்களன்று மும்பை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். கோரல் காந்தி தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், `என் கட்சிக்காரர் புகழ்பெற்ற பெண் ஐவிஎஃப் சிகிச்சை நிபுணர். அவர் சொந்தமாக மருத்துவமனை வைத்து நடத்துகிறார். இதுபோன்று சட்டவிரோத நடவடிக்கைகளில் அவர் ஈடுபடமாட்டார்’ என்று குறிப்பிட்டார்.

பின்னர் வழக்கை ஏப்ரல் 3 ம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதிகள், அவரைக் கைது செய்யக் கூடாது என்றும் டிஆர்ஐ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். தற்போது மருத்துவமனைக்கு எதிரான இன்னும் உறுதியான சாட்சியங்களை சேகரிக்க டிஆர்ஐ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Source : Times Of India 

நீங்க எப்படி பீல் பண்றீங்க