'108 பேரும் அரசுக்கெதிராகப் பொய்ப் பிரசாரம் செய்கிறார்கள்!' - அருண் ஜெட்லி காட்டம் | Arun Jaitley tells fake campaign by 108 economists

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (20/03/2019)

கடைசி தொடர்பு:12:16 (25/03/2019)

'108 பேரும் அரசுக்கெதிராகப் பொய்ப் பிரசாரம் செய்கிறார்கள்!' - அருண் ஜெட்லி காட்டம்

நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டம், ஜி.டி.பி வளர்ச்சி போன்றவற்றில் பொய்யான புள்ளி விவரங்களைத் தாக்கல் செய்ய மத்திய அரசு நிர்பந்திப்பதாக சில நாள்களுக்கு முன்னர் 108 பொருளாதார நிபுணர்கள் கூட்டாகப் புகாரளித்திருந்தார்கள். இதுகுறித்து  மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ``108 பொருளாதார நிபுணர்களும் அரசுக்கெதிராகப் பொய்ப்பிரசாரம் செய்கிறார்கள்" என்று கடுமையாக சாடியுள்ளார். இவர்களில் பெரும்பாலானவர்கள், அரசுக்கு எதிராகப் புகாரளிக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

ஏற்கெனவே இந்தப் புகார் குறித்து, அரசுக்கு ஆதரவாக 131 சார்ட்டர்ட் அக்கவுன்டன்டுகள் மறுப்பு அறிக்கை வெளியிட்டிருந்தார்கள். அந்த அறிக்கையில், அரசாங்கம் அளிக்கும் தரவுகளைக் குறைகூறுவது உலகெங்கும் வழக்கமான ஒன்றுதான் என்று கூறப்பட்டிருந்தது. மேலும், கடந்த காலத்தில் தங்களது விருதுகளைத் திருப்பியளித்து அரசுக்கு நெருக்கடி தந்தது போன்ற ஒரு நடவடிக்கைதான் இதுவென்றும் கூறியிருந்தார்கள். இதையடுத்து தற்போது அருண் ஜெட்லி, 108 பேரின் குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித ஆதாரமும் இல்லையென்றும், நமது புள்ளிவிவரங்களை உலக வங்கி மற்றும் ஐ.எம்.எப் போன்ற சர்வதேச நிறுவனங்களே ஏற்றுக்கொண்டுள்ளன என்றும் கூறினார். இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது என்று கூறப்படுவதும் கட்டுக்கதை என்றும் காட்டமாக மறுத்துள்ளார்.