விசாரணையில் பள்ளி ஆசிரியர் மரணம்! - காஷ்மீரில் கொதித்தெழுந்த மாணவ அமைப்புகள் | Prison death of Kashmiri Teacher created tension in the state

வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (20/03/2019)

கடைசி தொடர்பு:15:10 (20/03/2019)

விசாரணையில் பள்ளி ஆசிரியர் மரணம்! - காஷ்மீரில் கொதித்தெழுந்த மாணவ அமைப்புகள்

காவல்துறையின் விசாரணையில் சிறையில் இருந்த காஷ்மீரைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் சிறையிலேயே மரணமடைந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீர் ஆசிரியர்  ரிஸ்வான்

காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தின் அவந்திபுரா பகுதியைச் சேர்ந்தவர் ரிஸ்வான் ஆசாத் பண்டிட். தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரியும் இவர் தீவிரவாத அமைப்புகளோடு தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டு காஷ்மீர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். தேசிய விசாரணை ஆணையம் இவரை விசாரணை செய்துவந்தது. இதற்கிடையே கடந்த திங்கள் அன்று நடந்த விசாரணையின்போது இவர் மரணமடைந்துவிட்டதாக விசாரணை ஆணையம் தகவல் தெரிவித்தது. இதையடுத்து, காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவிவருகிறது. ரிஸ்வானின் இறப்பை அடுத்து காஷ்மீர் போலீஸாருக்கும் விசாரணை ஆணையத்துக்கும் மோதல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ரிஸ்வானின் குடும்பத்தினர் கூறுகையில், ``ரிஸ்வானுக்கு எந்தத் தீவிரவாத அமைப்போடும் தொடர்பு இல்லை. கடந்த மாதம் `ஜமாத்-இ- இஸ்லாமி’ என்கிற மத அரசியல் சார்ந்த கட்சியை மத்திய அரசு தடை செய்தது. அந்தக் கட்சிக்கு மட்டுமே எங்கள் மகன் ஆதரவாக இருந்துவந்தான். அதனாலேயே எங்கள் குடும்பத்தைத் தொடர்ந்து துன்புறுத்திவந்தார்கள். இதற்கிடையே விசாரணைக்காக அழைத்துச் சென்று எங்கள் மகனைத் தற்போது கொன்றுவிட்டார்கள்” என்று கதறுகின்றனர். ரிஸ்வானின் மரணத்தில் உடனடியாக விசாரணை தேவை என்று காஷ்மீரின் மாணவ அமைப்புகள் தற்போது கொதித்தெழுந்துள்ளன. காஷ்மீர் காவல்துறையும் சி.ஆர்.பி.சி. பிரிவு 176-ன் கீழ் ரிஸ்வானின் மரணத்தில் இருக்கும் மர்மம் குறித்தான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று  கூறியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க