`வாரத்தில் 4 நாள்கள் வேலை போதும்' - புதிய திறன்களைக் கற்க விரும்பும் இந்தியர்கள்! | 4 working days enough indian says in Survey

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (20/03/2019)

கடைசி தொடர்பு:16:00 (20/03/2019)

`வாரத்தில் 4 நாள்கள் வேலை போதும்' - புதிய திறன்களைக் கற்க விரும்பும் இந்தியர்கள்!

எதிர்வரும் காலத்தில், வாரத்தில் நான்கு நாள்கள் மட்டுமே வேலை நாள்களாக இருந்தால், கிடைக்கும் ஓய்வு நாள்களில், புதிய திறமைகளை வளர்ப்பதற்கே முக்கியத்துவம் தருவோம் என்று 66 சதவிகிதம் இந்தியர்கள் தெரிவித்துள்ளார்கள். பணியாளர் நிர்வாகம் தொடர்பான ஆய்வுகளை நடத்திவரும் க்ரோனாஸ் நிறுவனம், எட்டு நாடுகளைச் சேர்ந்த முழுநேரப் பணியாளர்கள் 3000 பேரிடம் எடுத்த சர்வேயில் இது தெரியவந்துள்ளது.

பணி

இதில் சுவாரஸ்யமான இன்னொரு தகவல் என்னவென்றால், வாரத்தில் 4 நாள்கள் பணியாற்றும் சலுகை கொடுத்தாலும்கூட, 5 நாள்கள் வேலை செய்யவும் தயாராக இருப்பதாக 69 சதவிகித இந்தியப் பணியாளர்கள் கூறியுள்ளனர். எனவே, மிகவும் கடுமையாக உழைப்பவர்களின் நாடாக இந்தியாவைக் குறிப்பிட்டுள்ளனர். இந்தியாவிற்கு அடுத்தபடியாக, மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்த 43 சதவிகிதம் பணியாளர்கள், 5 நாள்கள் உழைக்கத்தயாராக இருப்பதாகக் கூறியுள்ளனர். 

கூடுதல் ஓய்வு நாள்கள் கொடுத்தால், அவற்றை எப்படிப் பயன்படுத்த விருப்பம் எனக் கேட்டதற்கு, பெரும்பான்மை இந்திய இளைஞர்கள், புதிய திறமைகளை வளர்ப்பதற்கே முன்னுரிமைகொடுத்துள்ளார்கள். அதையடுத்து, தொலைக்காட்சி பார்ப்பது, குடும்பத்தோடு வெளியே செல்வது, திரைப்படம் பார்ப்பது, இசையை ரசிப்பது எனத் தெரிவித்துள்ளார்கள். இதே கேள்விக்கு, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பணியாளர்கள், அதிக நேரத்துக்கு உறங்குவதையே முதன்மையானதாகக் கூறியுள்ளார்கள். அடுத்ததாக, பயணங்களையும், உடற்பயிற்சியையும், நண்பர்களோடு பொழுதுபோக்குவதையும் குறிப்பிட்டுள்ளனர்.