ரூ.1000 சம்பளம்... குதிரையில் இருந்து 'டைவ்'!  மனம் பதைக்கவைத்த 4-ம் வகுப்பு சிறுவன் | 4-th standard student performs horse stunt to feed family

வெளியிடப்பட்ட நேரம்: 17:11 (21/03/2019)

கடைசி தொடர்பு:17:11 (21/03/2019)

ரூ.1000 சம்பளம்... குதிரையில் இருந்து 'டைவ்'!  மனம் பதைக்கவைத்த 4-ம் வகுப்பு சிறுவன்

மீபத்தில், வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியது. வீடியோவில், இரு குதிரைகள் மின்னல் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கின்றன. ஒரு குதிரையில் இருந்த சிறுவனை குதிரை கீழே தள்ளிவிடுகிறது. இந்தக் காட்சியைப் பார்க்கும்போதே நமக்கு  மனம் பதறுகிறது. கீழே விழுந்த சிறுவன்மீது, பின்னால் வந்த பைக் ஏறி விடும் நிலை. எப்படியோ தப்பினான். பைக்கில் இருந்த இருவர், சிறுவனை வேகமாக ஏற்றிக்கொண்டு மீண்டும் பறந்தனர். மருத்துவமனைக்குத்தான் கொண்டு செல்கிறார்கள் என்று பார்த்தால், ஓடிக்கொண்டிருந்த குதிரையை நோக்கி பைக்கை விரட்டினார்கள். குதிரையை எட்டியதும், அதன்மீது சிறுவனை மீண்டும் ஏற்றுகிறார்கள். சிறுவன், குதிரைமீது மின்னலெனப் பாய்கிறான்.  ஆம்புலன்ஸ் உள்ளிட்ட எந்த பாதுகாப்பும் இல்லாத வகையில், கர்நாடக மாநிலம் பெலகாவியில் நடந்த குதிரைப் பந்தய வீடியோ அது. 

குதிரைப்பந்தயம்

 குதிரையை ஓட்டிய சிறுவன் லோகேஷ், பெலகாவியைச் சேர்ந்தவன் என்பது தெரியவந்துள்ளது.. அங்குள்ள பள்ளி ஒன்றில் 4- ம் வகுப்பு படித்துவருகிறான். லோகேஷ், 6 வயதில் இருந்தே குதிரை ஓட்ட ஆரம்பித்துள்ளான். பெலகாவி பகுதியில்  இந்தச் சிறுவன்தான் சூப்பர் ஜாக்கி. பெலகாவி பகுதிகளில் குதிரைப்பந்தயங்கள் ரொம்பவே பாப்புலர். பரிசுத் தொகை அதிபட்சமாக 5,000 வரைதான் இருக்கும். சுற்று வட்டாரப் பகுதிகளில் நடைபெறும் குதிரைப் பந்தயங்களில் ஜாக்கியாக லோகேஷை அழைத்துச்செல்வார்கள். வெற்றிபெற்றால் பரிசுத் தொகையில் 50 சதவிகிதம் லோகேசுக்கு தந்துவிட வேண்டும். இதுதான் எழுதப்படாத ஒப்பந்தம். ஆனால், லோகேஷ் குதிரையில் இருந்து விழுந்த பந்தயத்தில் ரூ. 3000 பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்தது. குதிரை காயம் அடைந்திருப்பதாகக் கூறி ,அதற்கு ட்ரீட்மென்ட் கொடுக்க வேண்டுமென்று ரூ.500 பிடித்தம் செய்துவிட்டனர். 

குதிரைப்பந்தயம்

இளவயதிலேயே உயிரைப் பணயம்வைத்து குதிரைப் பந்தயத்தில் ஈடுபடும் லோகேஷ்,  '' சிக்கோடி என்ற இடத்தில்தான் பந்தயம் நடந்தது. மொத்தம் 8 கிலோமீட்டர் ஓட்ட வேண்டும். 3 கிலோ மீட்டர் தொலைவு வந்த பிறகு நிலை தடுமாறிய குதிரை, என்னைக் கீழே தள்ளி விட்டது. அப்போது, குதிரை 50 கி.மீட்டர் வேகத்தில் சென்றுகொண்டிருந்தது. எனக்கு எந்த அடியும் படவில்லை. என்னோட கோச் சித்தயா சங்கரய்யா பின்னால் பைக்கில் வந்து என்னை மீண்டும் குதிரையில் ஏற்றிவிட்டார். மீண்டும் பந்தயத்தில் கலந்துகொண்டு வெற்றியும் பெற்றுவிட்டேன். பரிசுப் பணம் முக்கியமல்லவா... என்று கூலாகச் சொல்கிறான். 

குதிரைப்பந்தயம்

வீடியோ வைரலானதில் இருந்து லோகேஷை இணையத்தில் 'பாகுபலி' எனக் கொண்டாடுகிறார்கள். லோகேஷின் பயிற்சியாளர் சித்தய  சங்கரய்யா கூறுகையில், பெலகாவி பகுதியில், கோயில் விழாக்களின்போது குதிரைப் பந்தயங்கள் நடத்துவது வழக்கமானது. ஆண்டுக்கு 10 ரேஸ்களாவது நடைபெறும். இதில் 7,8 பந்தயங்களிலாவது லோகேஷ் வெற்றிபெற்றுவிடுவான்''  என்கிறார்.

லோகேஷின் தந்தை பசவய்யா, ''எங்கள் குடும்பத்துக்கு லோகேஷ் சம்பாதித்து தருவதுதான் உதவிகரமாக இருக்கிறது. நானும் என் மனைவியும் நாள் ஒன்றுக்கு கூலி வேலைபார்த்து  ரூ.200 தான் சம்பாதிக்கிறோம். லோகேஷ் கொண்டுவரும் பணத்தில்தான் என்னுடைய மற்ற 3 குழந்தைகள் அரை வயிற்றுக்காவது கஞ்சி குடிக்கிறோம். குதிரையில் இருந்து கீழே விழுவது குதிரைப் பந்தயத்தில் சகஜமான விஷயம்தான் ''  என்கிறார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க