``மோடியின் தொலைநோக்குப் பார்வை என்னை ஈர்த்தது” - பா.ஜ.க-வில் இணைந்த கவுதம் கம்பீர் | Former Cricketer Gautam Gambhir joins Bharatiya Janata Party

வெளியிடப்பட்ட நேரம்: 13:42 (22/03/2019)

கடைசி தொடர்பு:13:42 (22/03/2019)

``மோடியின் தொலைநோக்குப் பார்வை என்னை ஈர்த்தது” - பா.ஜ.க-வில் இணைந்த கவுதம் கம்பீர்

கவுதம் காம்பீர்


நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கட்சிகள் பிரபலங்களை அரசியல் களத்தில் இறக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பா.ஜ.க-வில் கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி சமீபத்தில் இணைந்தார். இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் பா.ஜ.க-வில் இணைந்துள்ளார். கம்பீர் சமூகத்தில் நிலவும் பிரச்னைகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர். முடிந்த அளவு அவரது கருத்தை ட்விட்டர் பதிவுகள் மூலமாவது வெளிப்படுத்துவார். பெண்கள் மறுவாழ்வு, குழந்தைகளுக்கான விழிப்புணர்வு, புற்றுநோய் விழிப்புணர்வு பிரசாரங்களில் அவரைக் காணலாம். சமூகத்தால் ஒதுக்கப்பட்ட நிலையில் இருக்கும் திருநங்கைகளுக்கு ஆதரவாகவும் அவர் செயல்பட்டு வருகிறார்.  

கடந்தாண்டு அவர் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரது சமூகப் பணிகள் காரணமாக அரசியலில் ஈடுபடப் போகிறீர்களா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், அப்போது அவர் மறுத்தார்.  ``என்னுடைய கருத்துகள் சமூகம் சார்ந்து இருப்பதால் உங்களுக்கு இயல்பாகவே இந்தக் கேள்விகள் வரத்தான் செய்யும். ஆனால், அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை. என்ன செய்கிறேன் எனப் பொறுத்திருந்துப் பாருங்கள்” என முடித்துக்கொண்டார்.

இந்த நிலையில்தான் தற்போது அவர் பா.ஜ.க-வில் இணைந்துள்ளார். மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் ரவி சங்கர் பிரசாத் முன்னிலையில் டெல்லியில் இன்று பா.ஜ.க-வில் இணைந்தார். அப்போது பேசிய கம்பீர்,  ``மோடியின் தொலைநோக்குப் பார்வைதான் என்னை ஈர்த்தது. இந்தத் தளத்தில் பணியாற்றுவதைப் பெருமையாகக் கருதுகிறேன். நாட்டுக்கு நல்லது செய்ய எனக்கு இது ஒரு அற்புதமான தளம். என்னால் முடிந்ததை நான் சிறப்பாகச் செய்வேன் என நம்புகிறேன்” என்றார்.