மக்கள் மனங்களை வென்ற கே.சி.ஆர்! - எடப்பாடி பழனிசாமிக்கு வாய்ப்பே இல்லையா? | Voters most happy with Telangana CM - Poll Result

வெளியிடப்பட்ட நேரம்: 17:58 (22/03/2019)

கடைசி தொடர்பு:17:58 (22/03/2019)

மக்கள் மனங்களை வென்ற கே.சி.ஆர்! - எடப்பாடி பழனிசாமிக்கு வாய்ப்பே இல்லையா?

எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அ.தி.மு.க-வில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டன. மாநில முதல்வராக ஓ.பி.எஸ் பதவியேற்றார். கட்சிக்குள் ஏற்பட்ட சலசலப்பு காரணமாக, அவர் பதவி விலகினார். அதன்பின்னர், எடப்பாடி பழனிசாமி தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றார். கட்சியை ஓ.பி.எஸ்ஸும், ஈ.பி.எஸ்ஸும் வழிநடத்துகின்றனர். ஆட்சி அதிகாரம் ஈ.பி.எஸ் கையில் உள்ளது. முதல்வர் நாற்காலியில் அமர்ந்துள்ள எடப்பாடி பழனிசாமி, மக்கள் மனங்களை வென்றாரா என்றால், இல்லை என்கிறது ஆய்வு.

மாநில முதல்வர்கள் செயல்பாடு குறித்து ‘ஐஏஎன்எஸ் - சி-வோட்டர்ஸ்’ செய்தி நிறுவனம் சார்பில், அந்தந்த மாநில மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இந்தக் கருத்துக்கணிப்பின் முடிவில், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் டாப் லிஸ்ட்டில் இடம்பிடித்தார். மக்கள் மனதை வென்ற முதல்வர்களில் சந்திரசேகர் ராவுக்கே முதலிடம். சந்திரசேகர் ராவின் செயல்பாடுகள் திருப்தி அளிப்பதாக 68 சதவிகிதத்திற்கும் அதிகமான  மக்கள் தெரிவித்துள்ளனர். இமாச்சல் முதல்வர் ஜெய் ராம் தாக்கூர், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் முறையே, அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 5-வது இடம் கிடைத்துள்ளது.

இதில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர்மீது மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வரின் செயல்பாட்டில் திருப்தியில்லை எனப் பொதுமக்கள் பதிவு செய்ததாக அந்த அறிக்கை கூறுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுடன் அ.தி.மு.க கூட்டணி அமைந்தது, மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக இந்த ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வில் பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் இரண்டு முதல்வர்கள் டாப் 10 பட்டியலில் உள்ளனர்.