மோடிக்கு எதிராக வாரணாசி தொகுதியில் களமிறங்கும் 111 தமிழக விவசாயிகள்! | 111 farmers to contest against Modi in lokshabha election

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (22/03/2019)

கடைசி தொடர்பு:21:00 (22/03/2019)

மோடிக்கு எதிராக வாரணாசி தொகுதியில் களமிறங்கும் 111 தமிழக விவசாயிகள்!

 அய்யாகண்ணு - தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய  சங்கத் தலைவர்

ரும் நாடாளுமன்றத் தேர்தலில் மோடியை எதிர்த்து தமிழகத்தைச் சேர்ந்த 111 விவசாயிகள் வாரணாசி தொகுதியில் போட்டியிடப் போவதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத் தலைவர் அய்யாகண்ணு தெரிவித்துள்ளார். 

 அரசியல் கட்சிகளின் கூட்டணிகள் முடிவு, தொகுதி வேட்பாளர்கள் அறிவிப்பு, அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் என நாடாளுமன்றத் தேர்தல் களம் அதகளமாகியுள்ளன. பி.ஜே.பி சார்பில் பிரதமர் நரேந்திர மோடி வாராணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து தமிழக விவசாயிகள் 111பேர் வாரணாசி தொகுதியில் போட்டியிட உள்ளனர்.

இதுகுறித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத் தலைவர் அய்யாகண்ணு, `விவசாயிகள் பிரச்னை தொடர்பாக பலமுறை டெல்லியில்  போராட்டம் நடத்தி விட்டோம். ஆனால், மோடி அதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, குறிப்பாகத் தென்னிந்திய நதிகள் இணைப்பு, வங்கிக் கடன் தள்ளுபடி விலை நிர்ணயக் கொள்கை எனப் பல்வேறு பிரச்னைகள் குறித்து பலமுறை போராடியும், எந்தத் தீர்வும் விவசாயிகளுக்கு ஏற்படவில்லை. இந்தப் பிரச்னைகளை தீர்க்க வேண்டி பிரதமர் அமைதியாக இருந்து விட்டு தற்போது கூலாக அடுத்த தேர்தலுக்குத் தயாராகிவிட்டார். இனியும் தொடர்ந்து வெற்றி பெற்று அவரே பிரதமராக வந்தால் எங்களால் மீண்டும் கோரிக்கைகளுக்காக அவரிடம் கையேந்தி நிற்க முடியாது. அவரை வீழ்த்த வேண்டும் என்றால் அவருக்கு எதிராகத் தேர்தலில் களமிறங்குவதுதான் சரியானதாக இருக்கும் என முடிவு எடுத்துள்ளோம்.

மோடி

அவர் போட்டியிடுகிற வாரணாசித் தொகுதியில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்ய உள்ளோம். அதற்காக  அடுத்தமாதம்  22ஆம் தேதி வாரணாசி தொகுதிக்கு அரை நிர்வாணமாகச் சென்று அங்கு வேட்பு மனுத் தாக்கல் செய்கிறோம். வாரணாசியில் எங்களுக்கு விவசாயிகளின் செல்வாக்கு உள்ளது. அதனால் இந்தத் தேர்தல் போராட்டம் எங்களுக்குச் சாதகமான நிலையை ஏற்படுத்தும்" என்றார்.