`நான் யாரென்று காட்டுகிறேன்!'- கிரிக்கெட் விளையாட்டால் குர்காமில் நடந்த பயங்கரம் | 20-25 men barge into Gurgaon home, assault family

வெளியிடப்பட்ட நேரம்: 11:32 (23/03/2019)

கடைசி தொடர்பு:11:44 (23/03/2019)

`நான் யாரென்று காட்டுகிறேன்!'- கிரிக்கெட் விளையாட்டால் குர்காமில் நடந்த பயங்கரம்

இங்க என்ன பண்றீங்க?.. போய் பாகிஸ்தானில் விளையாடுங்கள்.. ஹரியானா மாநிலம் தமாஷ்பூர் கிராமத்தில் (Dhamaspur) காலி மனையில் கிரிக்கெட் விளையாடிய இஸ்லாமிய சிறுவர்களை சிலர் கடுமையான சொற்களால் வசைபாடியுள்ளனர். தட்டிக்கேட்ட சிறுவர்களின் உறவினரை சாலையில் வைத்து கடுமையாகத் தாக்கியுள்ளனர். இந்த விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

தாக்குதல்


உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த முகமது சாஜித் அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கடந்த 3 வருடங்களுக்கு முன்புதான் தமாஷ்பூர் கிராமத்திற்குக் குடிபெயர்ந்துள்ளனர். ஹோலி பண்டிகை தினத்தன்று அவரது குழந்தைகள் அருகில் இருந்த காலி மனையில் கிரிக்கெட் விளையாடியுள்ளனர். கிரிக்கெட் விளையாடும் போது இந்தச் சிறுவர்களுக்கும் மற்றொரு குழுவைச் சேர்ந்த சிறுவர்களுக்கும் தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது.

இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் இங்க என்ன பண்றீங்க.. போய் பாகிஸ்தானில் விளையாடுங்கள். எனக் கடுமையான சொற்களில் வசைபாடியுள்ளனர். இதனையடுத்த அந்தச் சிறுவர்களின் உறவினர் அந்த நபரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்களில் ஒருவர் இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருந்த நிலையில் சிறுவர்களின் உறவினர் கன்னத்தில் அறைந்துள்ளார். `நான் யாரென்று உனக்குக் காட்டுகிறேன்' எனக் கூறி அவர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர். சிறிது நேரத்தில் 6 இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் அந்தச் சிறுவர்களின் வீட்டை நோக்கி வந்துள்ளனர். மேலும் சிலர் கைகளில் ஆயுதங்களைக் கொண்டு வந்துள்ளனர். 

தாக்குதல்

இதைக்கண்டவர்கள் வீட்டை விட்டு வெளியேற முயன்றுள்ளனர். ஆனால், 20க்கும் மேற்பட்டவர்கள் அவர்களைச் சாலையில் வைத்து சாஜித்தை கடுமையாகத் தாக்கியுள்ளனர். அந்தக் கும்பலிடமிருந்து தப்பித்து ஓட அவர் முயன்றுள்ளார். ஆனால், அவர்கள் விடாமல் துரத்தி வந்து தாக்கியுள்ளனர். வீடுகளில் இருந்த பொருள்கள் மற்றும் கார்களையும் சேதப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரை ஏற்ற காவல்துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். `குற்றவாளிகளை அடையாளம் கண்டுள்ளோம். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்' எனக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தை குடும்ப உறுப்பினர்கள் சிலர் படம்பிடித்துள்ளனர். அந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்டுள்ளது. உயிர் பயத்துடன் அவர்கள் கூச்சலிடுகின்றனர்.

சாஜித் மனைவி


இந்தச் சம்பவம் குறித்து சாஜித் மனைவி கூறுகையில்,  ``நான் சமையலறையில் உணவு தயாரித்துக்கொண்டிருந்தேன். திடீரென்று ஏதோ சத்தம் கேட்டது. நான் வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தபோது ஒரு கும்பல் எங்கள் குடும்ப உறுப்பினர்களைத் தாக்கிக்கொண்டிருந்தனர். நான் அந்தக் கும்பலிடம் விட்டுவிடுமாறு கெஞ்சினேன். ஆனால், அவர்கள் நான் சொல்வதைக் கேட்பதாக இல்லை. எங்கள் வீட்டுக் கதவுகளை, வெளியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார்களை அடித்து நொறுக்கினர். எனது வீட்டில் இருந்த நகைகளையும் அந்தக் கும்பல் எடுத்துச் சென்றது. இங்கிருந்து சென்றுவிடுங்கள். இல்லையென்றால் உங்களுக்குச் சொந்தமாக இங்கு எதுவும் இருக்காது என எச்சரித்துவிட்டுச் சென்றனர்'' எனத் தெரிவித்தார்.

சாஜித்தின் தந்தை பேசுகையில், `நாங்கள் உள்ளூர்க் காவலர்களிடம் தெரிவித்தோம். ஆனால், அவர்கள் வரவே இல்லை. சுமார் 30 நிமிடங்கள் அந்தக் கும்பல் தாக்குதலில் ஈடுபட்டனர்' என்றார் வேதனையுடன்.