``போர்க் கைதிகளுக்குரிய மரியாதையுடன் எங்களைச் சுட்டுத்தள்ளுங்கள்!’’ - பகத்சிங் நினைவுதினப் பகிர்வு | Remembering Freedom Fighter Bhagat Singh on his death anniversary

வெளியிடப்பட்ட நேரம்: 13:53 (23/03/2019)

கடைசி தொடர்பு:13:53 (23/03/2019)

``போர்க் கைதிகளுக்குரிய மரியாதையுடன் எங்களைச் சுட்டுத்தள்ளுங்கள்!’’ - பகத்சிங் நினைவுதினப் பகிர்வு

தான் தப்பித்தால், புரட்சியின் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை நீர்த்துப்போகும் என எண்ணினார். பகத்சிங் மரணத்தின்போது சாதாரண இளைஞர்கள் முதல் தேசியத் தலைவர்கள் வரை எழுந்த பரபரப்பு என்பதே, அவர் விரும்பிய புரட்சிக்கான தூண்டுகோல். மக்கள் அரசியல்வயப்பட வேண்டும் என்கிறது பகத்சிங்கின் மரணம்.

``போர்க் கைதிகளுக்குரிய மரியாதையுடன் எங்களைச் சுட்டுத்தள்ளுங்கள்!’’ - பகத்சிங் நினைவுதினப் பகிர்வு

"கடந்த அக்டோபர் 7-ம் தேதி, உங்களுடைய நீதிமன்றம் எங்களுக்கு மரணதண்டனை விதித்தது. காரணம், நாங்கள் அரசாங்கத்துக்கு எதிராகப் போர் தொடுத்தோம் என்றார்கள். இந்தத் தீர்ப்பு உண்மையென்றால், இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் எதிராக ஒரு போர் நடப்பதை நீங்களே ஒப்புக்கொள்கிறீர்கள் என்றுதானே அர்த்தம். உண்மையாகவே, அப்படி ஒரு போர் நடந்துகொண்டுதான் இருக்கிறது. நீங்கள் எங்கள் மக்களையும் வளங்களையும் சுரண்டிச்செல்வதைப் பார்த்துக்கொண்டு, நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். தீவிரமாகவே எதிர்ப்போம். உங்கள் நீதிமன்ற வாதத்தின்படி, இந்தப் போரில் நாங்கள் பங்குபெற்ற குற்றத்துக்காகவே கைதுசெய்யப்பட்டிருக்கிறோம் அல்லவா! ஆதலால், நாங்கள் க்ரிமினல் கைதிகளோ அரசியல் கைதிகளோ அல்ல; போர்க்கைதிகள்! எனவே, மற்ற குற்றவாளிகளைப்போல் தூக்கிலிடாமல், போர்க் கைதிகளுக்குரிய மரியாதையுடன் எங்களைச் சுட்டுத்தள்ளுங்கள்!"

- பஞ்சாப் ஆளுநருக்கு அனுப்பிய கடிதத்தில், தங்களின் கடைசி ஆசையாக இந்த வேண்டுகோளை விடுத்தனர் பகத்சிங், ராஜ்குரு மற்றும் சுக்தேவ் (மார்ச் 20, 1931). ஆனால், அவர்களின் கடைசி ஆசை நிறைவேறவில்லை. அடுத்த சில தினங்களில் மூவரும் தூக்கிலிடப்பட்டனர். 

பகத்சிங்

இந்தியாவின் அகிம்சை வடிவம் காந்தி என்றால், புரட்சி வடிவம் பகத்சிங். வெறும் 23 வருடம் வாழ்ந்த பகத்சிங்கை, மக்கள் இன்று வரை மறக்கவில்லை. பகத்சிங்கும் அவரின் நண்பர்களும் ஆதிக்கத்துக்கு எதிராக இறுதி வரை போராடியவர்கள், அதிகாரக் கொடுங்கோன்மையால் இளமையிலேயே பலியானவர்கள். உலக இளைஞர்களிடையே விடுதலை உணர்ச்சியை விதைத்த நாயகர்கள். இந்திய அரசியலால் பரவலாக்கப்படாமல் `நாடு' என்ற குறுகிய வட்டத்துக்குள் சுருக்கப்பட்டார் பகத்சிங். `இந்தியச் சுதந்திரப் போராளி பகத்சிங்' என்று அவரின் தேசிய அடையாளத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் அரசியல் கட்சிகள், அவரின் செயல் மற்றும் கோட்பாடுகளிருந்து விலகும் போக்கையே கடைப்பிடிக்கின்றன.

பகத்சிங்

பகத்சிங் சிறையில் இருந்த இரண்டாண்டுக் காலம், சுதந்திரப் போராட்டத்தின் கொந்தளிப்பான காலங்கள். அவர் சிறையிலும் போராடினார். நீதிமன்றத்தில் தன் வாதங்களை அடுக்கினார். ஆனால், பிரிட்டிஷ் அரசு எதிர்பார்த்ததெல்லாம் ஒன்றுதான். `நாங்கள் செய்ததை எண்ணி வருந்துகிறோம். இனிமேல் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டோம்!' என்ற மன்னிப்புக் கடிதம். அப்போது பலர் இதுபோல எழுதிக் கொடுத்தார்கள். ஆனால், பகத்சிங் அதைத் திட்டவட்டமாகப் புறக்கணித்தார். தான் தப்பித்தால், புரட்சியின் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை நீர்த்துப்போகும் என எண்ணினார். பகத்சிங் மரணத்தின்போது சாதாரண இளைஞர்கள் முதல் தேசியத் தலைவர்கள் வரை எழுந்த பரபரப்பு என்பதே, அவர் விரும்பிய புரட்சிக்கான தூண்டுகோல். மக்கள் அரசியல்வயப்பட வேண்டும் என்கிறது பகத்சிங்கின் மரணம்.

பகத்சிங்கின் வழிமுறைகள் நியாயமானவையா, புத்தகத்தைப் படித்துவிட்டு கற்பனை உலகைக் கட்டமைத்துக்கொண்டாரா, எதார்த்தத்தை உணரும் அரசியல் முதிர்ச்சி அவரிடம் இருந்ததா என்றெல்லாம் வாதாடுவார்கள். பகத்சிங் இருக்கும்போதே `இன்குலாப் ஜிந்தாபாத்!' (புரட்சி ஓங்குக) என்ற அவரின் முழக்கத்தையெல்லாம் நகைத்தனர். ஆனால், சமூகச் சூழல் சார்ந்து எந்தளவுக்கு தெளிவான ஒரு புரிதலை அவர் பெற்றிருந்தார் என்பது அவரின் எழுத்துகளின் மூலம் நம்மால் உணர முடிகிறது.

புரட்சி

1929-ம் ஆண்டு அவர் எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார். "புரட்சி என்றால் கண்டிப்பாக ரத்தம் சிந்தப்பட வேண்டும் எனப் பொருளல்ல. அது துப்பாக்கி, வெடிகுண்டு கலாசாரமல்ல... சில இயக்கங்களில் அவை முக்கியப் பாத்திரம் வகிக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அந்தக்  காரணத்தால் அவையே ஓர் இயக்கமாக ஆகிவிடுவதில்லை. கலகம் என்பது, புரட்சியல்ல. இறுதியில் அது புரட்சிக்கு இட்டுச்செல்லும். இதில் புரட்சி என்ற சொல், ஓர் உணர்வு. நல்ல மாற்றத்துக்கான பெருவிருப்பம் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்படுகிறது. சமூக அமைப்பில் தன்னை நிலைநிறுத்திக்கொண்ட மக்கள், தங்களைப் பிற்போக்குத்தனங்களிலிருந்தும் அடக்குமுறைகளிலிருந்தும் விடுவித்துக்கொள்ள அச்சப்படுகிறார்கள். அவர்களுக்கான மாற்றத்தை நன்மையின் வழி முன்னெடுப்பதே புரட்சியாகிறது" என்கிறார் பகத்சிங்.

இன்றைய சூழ்நிலைக்கு ஆயுதப் போராட்டங்கள் தீர்வாகுமா என்பதற்கும், சரியான தீர்வைத் தருகிறார். "அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பது வரலாற்றின் திசையை மாற்றுவதே தவிர, ஆயுதம் ஏந்துவதல்ல. சூழலுக்கேற்றவாறு செயல்முறைகள் மாறுபடுகின்றன" என்கிறார். இந்தப் புள்ளியே ஆத்திக அடக்குமுறைக்கு எதிரானவர்களோடு பகத்சிங்கை இணையவைக்கிறது.

தன் குறிக்கோளை வெல்வதற்கான ஆயுதமாக, மரணத்தை விரும்பிக் கேட்கவைத்தது. தூக்குக்கயிற்றின் முன் மரணத்தை வரவேற்க நின்ற மூவர் உதிர்த்த அந்த வார்த்தை, பகத்சிங் தன் மரணத்தின் வழியே மக்களிடம் விட்டுச்சென்ற பரிந்துரை. அது, `இன்குலாப் ஜிந்தாபாத்!'


டிரெண்டிங் @ விகடன்