ஐடிபிஐ வங்கியை எல்ஐசி வாங்கியதால் வங்கி ஊழியர்களுக்குப் பணியிழப்பு ஏற்படாது! | No job threat for IDBI employees

வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (25/03/2019)

கடைசி தொடர்பு:15:30 (25/03/2019)

ஐடிபிஐ வங்கியை எல்ஐசி வாங்கியதால் வங்கி ஊழியர்களுக்குப் பணியிழப்பு ஏற்படாது!

இந்தியத் தொழில்துறையின் வளர்ச்சிக்கு நிதியுதவி அளிக்கும் நோக்கத்தோடு மும்பையைத் தலைமையிடமாகக்கொண்டு 1964ல் உருவாக்கப்பட்டதே ஐடிபிஐ (Industrial Development Bank Of India - IDBI) வங்கி. வாராக்கடன் பிரச்னையில் சிக்கி நஷ்டத்தில் இயங்கிவந்த அந்த வங்கியின் பெரும்பான்மை பங்குகளை எல்ஐசி நிறுவனம் வாங்குவதற்கான செயல்திட்டம் கடந்த ஆண்டிலேயே வகுக்கப்பட்டது. தற்போது அது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த வங்கியின் 51% பங்குகளை எல்.ஐ.சி நிறுவனம் வாங்கியுள்ளது. இதன்மூலம், ஐடிபிஐ வங்கி, பொதுத்துறை வங்கி என்ற நிலையிலிருந்து தனியார் வங்கியாக மாற்றம் பெற்றுள்ளது. வங்கியின் வளர்ச்சி சார்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், இதில் பணியாற்றும் ஊழியர்கள் மத்தியில் பணிப்பாதுகாப்பு குறித்த கேள்விக்குறியை ஏற்படுத்தியது.

ஐடிபிஐ

ஆனால், இதுகுறித்து உயரதிகாரிகள் மட்டத்தில் குறிப்பிடும்போது, வங்கியில் அரசின் பங்குகள் இருப்பு குறைந்தபோதும், ஐடிபிஐ வங்கியின் நிர்வாக முறையில் பெரிய மாற்றம் இருக்காது. குறிப்பாக, ஆட்குறைப்பு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வாய்ப்பில்லை. அதேபோல, பணியிடங்களை நிரப்புவதில் இட ஒதுக்கீடு முறை தொடர்ந்து பின்பற்றப்படும். எனவே, பணியாளர்கள் இந்த மாற்றம் குறித்து அச்சப்படத் தேவையில்லை. எழுத்துபூர்வமாக மட்டுமே இந்த மாற்றம் இருக்குமென்றும், வங்கியின் விதிமுறை மற்றும் நடைமுறையில் பெரிய அளவில் எந்த மாற்றமும் கொண்டுவர மாட்டார்கள், என்றும் நம்பிக்கை தெரிவித்தார்கள்.