`மீண்டும் இங்கு வந்துவிடாதே; அடித்துக் கொன்றுவிடுவோம்'! - காஷ்மீரிகள் மீது தொடரும் தாக்குதல் | Post Pulwama Attacks On Kashmiris Continue

வெளியிடப்பட்ட நேரம்: 17:58 (25/03/2019)

கடைசி தொடர்பு:17:58 (25/03/2019)

`மீண்டும் இங்கு வந்துவிடாதே; அடித்துக் கொன்றுவிடுவோம்'! - காஷ்மீரிகள் மீது தொடரும் தாக்குதல்

நாட்டையே உலுக்கிய புல்வாமா தாக்குதலில் இந்திய சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 44 பேர் மரணமடைந்தனர். உயிர்நீத்த துணை ராணுவ வீரர்களுக்காக நாடே கண்ணீர் வடித்தது. இந்தச் சம்பவம் நடந்து ஒரு மாதத்துக்கு மேலாகிவிட்டது. ஆனால், தாக்குதலுக்குக் காரணமான ஆதில் அகமது காஷ்மீரி என்பதால் இன்னும் காஷ்மீரி மக்களுக்கு எதிராக வன்முறைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. குண்டுவெடிப்பு நடத்தப்பட்டபோதே இது தீவிரவாத பிரச்னை என்று பாராமல் இனவாதப் பிரச்னையாக திசைதிருப்பி நாட்டின் பல்வேறு இடங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் காஷ்மீரி மக்களுக்கு அச்சுறுத்தல் விளைவிக்கப்பட்டது. குறிப்பாக டேராடூன், டெல்லி உள்ளிட்ட இடங்களில் காஷ்மீரிகளை அனுமதிக்க மறுத்தனர். தாக்குதல் நடந்த 14-ம் தேதி முதல் பல்வேறு இடங்களில் உள்ள காஷ்மீரிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். சில இடங்களில் `காஷ்மீரிகளுக்கு அனுமதி இல்லை' என நோட்டீஸ் ஒட்டினர். 

புல்வாமா தாக்குதல்

சமீபத்தில் கூட உத்தரப்பிரதேசத்தில் காஷ்மீரிகள் இருவரைக் குச்சிகளால் அந்தப் பகுதியினர் அடிக்கும் வீடியோ சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், புல்வாமா தாக்குதல் நடந்து ஒரு மாதத்துக்கும் மேலாகியுள்ளது. இப்போதும் காஷ்மீரிகளுக்கு எதிரான தாக்குதல் நடந்துள்ளது. அப்சார் ஜஹூர் தார் என்பவர் ஒரு காஷ்மீரி. 24 வயதாகும் இவர் பெங்களூரில் சிவில் இன்ஜினீயரிங் படித்து வருகிறார். ஏழ்மையான நிலையில் இருந்தாலும், மாடலிங் துறையில் மாடலாக இருந்துகொண்டே அதில் கிடைக்கும் வருமானம் மூலம் பெங்களூரில் தங்கிப் படித்து வருகிறார். கடந்த 19-ம் தேதி மாலை வழக்கம்போல அப்சார் ஜிம்முக்குச் சென்றுவிட்டு அங்குள்ள கடை ஒன்றுக்கு காபி குடிக்கச் சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த நான்கைந்து பேர் கொண்ட கும்பல், மாணவர்களை `ஈவ் டீசிங் செய்கிறாயா' எனக் கேள்வி கேட்டுள்ளனர். ஆனால், அதை அப்சார் மறுத்தாலும், அவரைக் கண்டித்து அனுப்பியுள்ளது அந்தக் கும்பல். 

காஷ்மீரி

அதற்கு மறுநாள் இரும்பு ராடுகளைக் கொண்டு மீண்டும் வந்த இதே கும்பல் அங்குள்ள கடையில் வைத்து அவரை எதுவும் சொல்லாமல் அடிக்கத் தொடங்கியுள்ளனர். பின்னர் அவரைக் கடுமையாக தாக்கியபிறகே அங்கிருந்து அந்தக் கும்பல் சென்றது. இந்தச் சம்பவங்கள் குறித்து அப்சார் போலீஸில் புகார் கொடுக்க குந்தாலஹள்ளி காலனியைச் சேர்ந்த மூன்று இளைஞர்களைக் கைது செய்துள்ளனர். சம்பவம் குறித்து பேசிய அப்சார், ``என் நண்பர்கள்தான் விரைந்து வந்து என்னை மீட்டனர். அவர்கள் இல்லையென்றால் அந்தக் கும்பல் என்னைக் கொலை செய்திருப்பார்கள். நான் மூன்று வருடமாகப் பெங்களூரில் வாழ்ந்து வருகிறேன்.

அப்சார் ஜஹூர் தார்

இதுபோன்ற சம்பவம் இதற்குமுன் நடந்ததில்லை. அவர்கள் எதற்காக என்னைத் தாக்கினார்கள் என்பது தெரியவில்லை. காஷ்மீரி என்பதற்காகவா அல்லது வேறு ஏதும் காரணமா என்று தெரியவில்லை. ஆனால், அடித்து முடித்தவுடன் அவர்கள் கிளம்பும் முன், `மீண்டும் இங்கு வந்துவிடாதே. அடித்துக் கொன்றுவிடுவோம்' எனக் கூறிவிட்டுச் சென்றனர். இதனால் பயத்துடனே வாழ்ந்து வருகிறேன். கல்லூரிக்குச் செல்லவில்லை. அந்தக் கும்பலைக் கைது செய்தவுடன் ஜாமீனில் விடுவித்துவிட்டார்கள். அவர்கள் அனைவரும் தற்போது என் ஏரியா முன்பே திரிந்துகொண்டிருக்கிறார்கள்" எனக் கூறியுள்ளார். 

ஒரு மாதம் கடந்தும் காஷ்மீரிகள் மீதான வன்முறை தொடர்ந்து சோகமளிக்கும் வகையில் உள்ளது எனச் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க