35 சதவிகிதம் அளவுக்குக் குறைந்த இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை! | first time voters decreasing

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (25/03/2019)

கடைசி தொடர்பு:20:00 (25/03/2019)

35 சதவிகிதம் அளவுக்குக் குறைந்த இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை!

இந்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில், முதன்முறை வாக்களிக்கும் 18-19 வயதுடைய இளம்வாக்காளர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. கடந்த 2014 பொதுத்தேர்தலில் 2.3 கோடியாக இருந்த புதிய வாக்காளர்கள் எண்ணிக்கை, தற்போது 1.5 கோடியாகக் குறைந்துள்ளது. இது ஒப்பீட்டளவில் 35% குறைவானதாகும்.  

இளம் வாக்காளர்கள்

இந்த ஆண்டு வாக்களிக்கவுள்ள புதிய வாக்காளர்களில் 50% வாக்காளர்கள், மேற்குவங்கம், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்தவர்களாகும். கடந்த தேர்தலில் இந்த `முதன்முறை வாக்களிக்கும்' வர்க்கம்தான் மாற்றம் கருதி மோடிக்கு பெருவாரியாக வாக்களித்திருந்தார்கள். கடந்த 2014 தேர்தலில் முகநூல் மூலமான பிரசாரத்தால் இந்த இளம்வாக்காளர்கள் பெருமளவு ஈர்க்கப்பட்டனர். தற்போது இவர்களில் பெரும்பாலானவர்களின் கரங்களில் இணைய இணைப்புடன்கூடிய செல்போன்கள் இருக்கின்றன. முகநூலில் மட்டுமின்றி, ட்விட்டர், வாட்ஸ்அப், இணையப்பத்திரிகை, வீடியோ சேனல்களில் பெருமளவு நேரத்தைச் செலவிடும் இந்த வர்க்கத்தினருக்கேற்ப அரசியல் கட்சிகளும் தங்களை மெருகேற்றிக்கொள்வது அவசியமாகிறது. இதை அரசியல் கட்சிகளும் உணர்ந்திருப்பதால் தங்களது கட்சியின் ஐடி விங்கைப் பலப்படுத்தி, தொடர்ந்து பதிவுகள் போடுவதன்மூலம் பரபரப்பு ஏற்படுத்தி வருகின்றன.

இளம் வாக்காளர்கள்

சமீபத்தில் பா.ஜ.க-வின் இணையதளம் முடக்கப்பட்டபோது, உங்களுக்கு நாங்கள் கைகொடுக்கலாமா என காங்கிரஸ் தரப்பில் கிண்டலாக ட்வீட் செய்யப்பட்டது. அதேபோல, ராகுல்காந்தியின் ப்ரஸ்மீட் ஒன்று காலையில் ஏற்பாடாகி, மதியத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. அந்த செய்தியில் பா.ஜ.க-வின் ஐடி விங், ராகுல்காந்தி இன்னமும் தூங்கி எழவில்லையா என்பதாக கிண்டலடித்தது. பதிலுக்கு காங்கிரஸ் சார்பாக, ராகுல்காந்தி எப்படியும் ப்ரஸ் மீட் வைத்துவிடுவார். மோடியைப்போல ப்ரஸ்மீட்டே நடத்தாமல் விட்டுவிட மாட்டார் என்று பதில் தரப்பட்டது.  இதுபோன்ற சமூகவலைதள மோதல் கலாட்டாக்களை இனி தினமும் ரசிக்கலாம். இவர்களில் யார் இளம் வாக்காளர்களின் மனதைக் கவர்ந்தவர்கள் என்பதை தேர்தல் முடிவு தெரிவிக்கக்கூடும்.