தேர்தலுக்காக மதுபானக் கடத்தலைத் தடுக்க ரயில்வே புது யோசனை! | Chain pulling system may be discontinued in Bihar

வெளியிடப்பட்ட நேரம்: 20:10 (25/03/2019)

கடைசி தொடர்பு:20:10 (25/03/2019)

தேர்தலுக்காக மதுபானக் கடத்தலைத் தடுக்க ரயில்வே புது யோசனை!

தேர்தல் வந்துவிட்டாலே கட்சிக்காரர்களுக்கு பிரியாணியும், குவார்ட்டரும் வாங்கிக்கொடுப்பது இந்தியா முழுவதும் வழக்கமாகிவருகிறது. அதிலும், மிகவும் பின்தங்கிய மாநிலமான பீகாரில் மதுபானங்களை திருட்டுத்தனமாகச் சப்ளை செய்வது மிகுதியாக உள்ளது. நம்மூரில் கார்களில் கடத்திச்செல்லப்படும் மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்தியைப் படித்திருப்போம். பீகாரில் ரயில்கள் மூலமாகக் கடத்துவது வழக்கமாக இருக்கிறது. தேர்தல் வந்தாலே ரயில்வே போலீஸாருக்கு பெரும் தலைவலியாக இருப்பவர்கள் இந்த மதுபானத் திருடர்களே.

மதுபானக் கடத்தல்

மதுபானங்களோடு ரயிலில் ஏறுபவர்கள், ரயில் நிலையங்களில் இறங்கினால் அவர்களை எளிதில் மடக்கிவிடலாம். ஆனால், அவர்களோ ஷேர் ஆட்டோபோல ரயில் ஏதேனும் கிராமத்தின் வழியாகச் செல்லும்போது அபாயச்சங்கிலியை இழுத்து வண்டியை நிறுத்துவார்கள். உடனே மதுபானப் பெட்டிகளோடு இறங்கி ஓடிவிடுவார்கள். ரயில்வே போலீஸாரால் அவர்களைத் துரத்திச்சென்று பிடிக்க இயலாது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மதுபானக் கடத்தலுக்காக அபாயச்சங்கிலியை இழுத்ததாக 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது இதற்கு தீர்வு காணும்விதமாக, தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் காலத்தில் மட்டும் பீகார் வழியாகப் பயணிக்கும் ரயில் வண்டிகளில் அபாயச்சங்கிலியைப் பயன்படுத்த முடியாதபடி செய்யவிருக்கிறார்கள். 

ரயில்

இதுகுறித்து ரயில்வே பாதுகாப்புப்படை உயர் அதிகாரி கூறுகையில், ``பீகார் மாநிலத்தில் மதுபானத்தைத் திருட்டுத்தனமாக விற்பவர்கள், விரும்பும் இடங்களில் ரயிலை நிறுத்தி இறங்கி ஓடுவது வழக்கமாக இருக்கிறது. தேர்தல் காலங்களில் இதைத் தடுக்கும்விதமாக, அபாயச்சங்கிலியை செயலிழக்கச் செய்வது குறித்து ஆலோசித்து வருகிறோம்." என்றார். அபாயச்சங்கிலியைச் செயலிழக்கச் செய்வதால் அதை இழுத்தாலும் ரயில் வண்டி நிற்காது. இதன்மூலம் மதுபானங்களைக் கடத்துவோரைக் கட்டுப்படுத்த முடியுமென நம்பப்படுகிறது. பீகாரில் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.