`வாஸ்து சரியில்ல' - லாட்டரியில் விழுந்த ரூ.5 கோடி வீட்டை திருப்பிக்கொடுத்த மும்பைவாசி | Shiv Sena Worker Refuses Rs 5.80 Cr Flat It Because Of 'Vaastu'

வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (26/03/2019)

கடைசி தொடர்பு:14:21 (26/03/2019)

`வாஸ்து சரியில்ல' - லாட்டரியில் விழுந்த ரூ.5 கோடி வீட்டை திருப்பிக்கொடுத்த மும்பைவாசி

வாஸ்து சரியில்லை எனக் கூறி லாட்டரியில் தனக்கு விழுந்த வீட்டைத் திருப்பிக் கொடுத்துள்ளார் மும்பை பிரமுகர் ஒருவர்.

வினோத் ஷெர்க்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த வினோத் ஷெர்க். இவர் சிவசேனா கட்சியில் உறுப்பினராக உள்ளார். இவருக்குக் கடந்த வருடம் மகாராஷ்டிரா வீட்டுவசதி மற்றும் பகுதி மேம்பாட்டு ஆணையத்தில் லாட்டரியில் இரண்டு வீடுகள் கிடைத்தன. இதில் ஒரு வீடு 4.99 கோடி மதிப்புள்ளது, இன்னொரு வீடு ரூ.5.80 கோடி மதிப்புள்ளது. தற்போது இந்த இரண்டு வீட்டில் ரூ.5.80 கோடி மதிப்புள்ள வீட்டை வீட்டுவசதி ஆணையத்திடமே திருப்பி ஒப்படைத்துள்ளார். மேலும், வாஸ்து சரியில்லை என்பதால்தான் இந்த வீட்டை வேண்டாம் என அவர் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய வினோத் ஷெர்க், ``கடந்த வருடம் வீட்டு வசதி ஆணையத்தின் விதிகள் படி இரண்டு பிளாட்டுகள் லாட்டரியில் கிடைத்தன. அதில் ஒரு வீட்டை விரிவுபடுத்த நினைத்தேன். இதுதொடர்பாக வாஸ்து ஆலோசகரைத் தொடர்பு கொண்டேன்.

என்னுடைய வாஸ்து ஆலோசகர் இந்த வீட்டில் வாஸ்து சரியில்லை என்றார். மேலும், அங்கு சில மாற்றங்களைச் செய்தால் அரசியலிலும், சமூக வாழ்விலும் சிறந்த வாழ்க்கை கிடைக்கும் எனக் கூறினார். ஆனால், அவர் கூறிய மாற்றங்களை அந்த வீட்டில் மேற்கொள்ள முடியவில்லை. ஆனால், 4.99 கோடி மதிப்புள்ள வீட்டில் அந்த மாற்றங்களைச் செய்ய முடிந்தது. அதனால்தான் அந்த வீட்டை வேண்டாம் எனக் கூறினேன். அந்த வீட்டை எடுத்துக்கொள்ளுமாறு அதிகாரிகளிடமும் தெரிவித்துவிட்டேன்" எனக் கூறியுள்ளார். 

வாஸ்து

இதை உறுதிப்படுத்தியுள்ள வீட்டுவசதி ஆணைய அதிகாரிகள், ``அவர் வேண்டாம் எனக் கூறிவிட்டார். இதனால் அந்த வீடு அவருக்கு அடுத்து வெயிட்டிங் லிஸ்டில் இருப்பவருக்குக் கொடுக்கப்படும். அதற்கான பணிகள் நடந்து வருகிறது. விரைவில் வீடு மற்றவருக்குக் கொடுக்கப்படும்" எனக் கூறினர். வாஸ்து சரியில்லை என்பதற்காக ரூ.5 கோடி மதிப்புள்ள வீட்டை வேண்டாம் எனக் கூறியுள்ள சம்பவம்  அந்தப் பகுதியில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க