`கான்பூரில் மட்டுமல்ல எங்கேயுமே போட்டியிடக் கூடாதாம்!'' - ஜோஷியைக் கலங்கடித்த நோட்டீஸ் | Have been asked not to contest Lok Sabha election says Murli Manohar

வெளியிடப்பட்ட நேரம்: 16:27 (26/03/2019)

கடைசி தொடர்பு:16:27 (26/03/2019)

`கான்பூரில் மட்டுமல்ல எங்கேயுமே போட்டியிடக் கூடாதாம்!'' - ஜோஷியைக் கலங்கடித்த நோட்டீஸ்

மக்களவைத் தேர்தலில் அத்வானியை பாரதிய ஜனதா கட்சி ஓரம் கட்டியுள்ளது. அத்வானியை மட்டுமல்ல முரளி மனோகர் ஜோஷியையும் அமித் ஷாவும் மோடியும் ஓரம் கட்டியுள்ளனர். கடந்த 2009-ம் ஆண்டு தேர்தலில் வாரணாசியில் போட்டியிட்டு வென்றவர் இந்த முரளி மனோகர் ஜோஷி. வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் பாரதிய ஜனதா கட்சியில் செல்வாக்காக வலம் வந்தவர். அத்வானிக்கு தற்போது 91 வயதாகிறது. வயது மூப்பு காரணமாக அத்வானி இதுவரை போட்டியிட்டு வந்த காந்திநகரில் வரும் தேர்தலில் அமித் ஷா போட்டியிடுகிறார். அத்வானிக்கு சீட் கொடுக்கப்படவில்லை. 

முரளி மனோகர் ஜோஷி

பிரதமர் மோடிக்கு வாரணாசியை விட்டுக் கொடுத்த பிறகு  2014-ம் ஆண்டு தேர்தலில் முரளி மனோகர் ஜோஷி கான்பூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறை முரளி மனோகர் ஜோஷிக்கும் சீட் மறுக்கப்பட்டத் தகவலை பாரதிய ஜனதா கட்சி பொதுச் செயலாளர்  ராம்லால் தெரிவித்துள்ளார். அப்போது, `இந்தத் தகவலை என்னிடத்தில் கூறுவதற்கு அவர்கள் உங்களைப் பயன்படுத்தியுள்ளனர் ' என்று ஜோஷி வேதனைப்பட்டுள்ளார். தற்போது 85 வயதான ஜோஷி, சிறிய பிட் நோட்டீஸ் அடித்து கான்பூரில் வெளியிட்டுள்ளார். அதில்,' அன்புள்ள கான்பூர் வாக்காளர்களே பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் ராம்லால் என்னிடம் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்ற தகவலை கூறியுள்ளார். கான்பூரில் மட்டுமல்ல எங்கேயுமே நான் போட்டியிடக் கூடாதாம்'  என்று கூறியிருக்கிறார். பாரதிய ஜனதா கட்சியின் ஏழை எம்.பி என்று சொல்லப்படும் கரிய முண்டாவுக்கும் இந்த முறை சீட் மறுக்கப்பட்டுள்ளது. 

முரளி மனோகர் ஜோஷி

பாரதிய ஜனதா கட்சி தரப்பில்,' வயதானவர்கள் இளையோர்களுக்கு வழிவிட வேண்டுமென்பது கட்சியின் கொள்கைகளில் ஒன்று. அந்த நடைமுறைதான் பின்பற்றப்பட்டு வருகிறது' என்று சொல்லப்படுகிறது.

2014-ம் ஆண்டு மோடியைப் பிரதமர் வேட்பாளராக அறிவித்ததற்கு ஆரம்பம் முதலே எதிர்ப்புக்கொடி தூக்கியவர் ஜோஷி. மோடி பிரதமர் ஆனதும் ஜோஷி கட்சியில் இருந்து ஓரம்கட்டப்பட்டார். இதனால்  இருவருக்கும் இடையே அடிக்கடி முட்டல் மோதல்கள் ஏற்பட்டன. அரசின் பல்வேறு திட்டங்களை ஜோஷி வெளிப்படையாக விமர்சித்தார். இதனால் ஜோஷி ஜனாதிபதி ஆகும் வாய்ப்பும் தட்டிப்பறிக்கப்பட்டது. இருப்பினும் தான் போட்டியிட்டு வென்ற வாரணாசி தொகுதியை பிரதமர் மோடிக்கு 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் முரளி மனோகர் ஜோஷி விட்டுக்கொடுத்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க