வருமான வரி - இனி ஃபேஸ்புக் பதிவுகளும் கண்காணிக்கப்படும்! | No country for evaders: This April 1, India enters uncharted tax territory 

வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (26/03/2019)

கடைசி தொடர்பு:20:20 (26/03/2019)

வருமான வரி - இனி ஃபேஸ்புக் பதிவுகளும் கண்காணிக்கப்படும்!

வரி ஏய்ப்பைத் தடுப்பதற்காக, வருகிற ஏப்ரல் 1-ம் தேதி முதல் வரி ஏய்ப்பாளர்களின் ஃபேஸ்புக் கணக்கு உள்ளிட்ட பல விவரங்களையும் வருமான வரித் துறை தனது கண்காணிப்பின் கீழ் கொண்டு வர உள்ளது. 

வருமான வரி ஏய்ப்பு

நாட்டில்  வரி செலுத்தும் வரம்புக்குள் வருபவர்களின் வாழ்க்கைத் தரம் பலவிதங்களில் உயர்ந்துள்ளது. சுற்றுலா, பொழுதுபோக்கு, சொந்த வாகனம் என அவர்கள் செலவிடும் தொகை பெரும்பாலும், அவர்கள் தாக்கல் செய்யும் வருமான வரிக் கணக்கு படிவங்களில் இடம்பெறுவதில்லை. 

இது அரசுக்கு நீண்ட கால தலைவலியாகவே உள்ளது. ஏற்கெனவே நாட்டில் வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது.  இந்த நிலையில், அவ்வாறு வரி செலுத்தும் வரம்புக்குள் இருப்பவர்களும் தங்களது உண்மையான வருமான விவரங்களைத் தெரிவிப்பதில்லை. ஒவ்வொருவரின் வருமானம் அல்லது பண இருப்பு குறித்த விவரங்களை அரசு தெரிந்துகொள்வதற்கு தற்போது உதவுவது சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்கு விவரம் மட்டும்தான். ஆனால், வங்கிக் கணக்கில் காட்டப்படாத பணம் ஏராளமாகவே புழங்குகிறது.  

எனவேதான் வங்கிக் கணக்கைத் தாண்டி, வரி ஏய்ப்பாளர்களின் அனைத்து விவரங்களையும் தொடர்ந்து கண்காணிக்கக்கூடிய 'பிக் டேட்டா' (Big data) திட்டம் ஒன்றை, மிகவும் சிரமப்பட்டு சுமார் 1000 கோடி ரூபாய் செலவில் அரசு தயாரித்துள்ளதாக வருமான வரித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

இந்த 'பிக் டேட்டா' வில் வரி ஏய்ப்பாளர்களின் ஃபேஸ்புக் கணக்கு உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்கள் குறித்த விவரங்கள் மற்றும் அவர்களின் இதரச் செலவினங்களைக் கண்டறியக்கூடிய  பகுதிகள் பற்றிய தகவல்கள் இடம்பெறும். 

வரிக் கணக்கு

எனவே, இனிமேல் வரி ஏய்ப்பாளர்கள் கணக்கில் காட்டாமல் தாங்கள் புதிதாக வாங்கிய கார், வீடு, மனை (குடும்பத்தின் இதர உறுப்பினர்கள் அல்லது பினாமி பெயர்களில்) போன்றவை குறித்து தங்களது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் பெருமிதமாக பதிவிட்டால் மாட்டிக் கொள்வார்கள். சம்பந்தப்பட்டவர்களின் சமூக வலைதளங்களைக் கண்காணிக்கும் அதிகாரிகள், உடனடியாக அவர்களது இடங்களில் அதிரடியாகச் சோதனை மேற்கொண்டு அனைத்துக்கும் கணக்கு கேட்பார்கள். வருமானத்தை மறைத்திருந்தால் வழக்குப் பாயும். 

இதுபோன்ற கண்காணிப்பு வீடு, மனை, கார் போன்றவற்றுடன் மட்டும் நிற்காது. வெளிநாடு சுற்றுப்பயணம், தங்கிய விடுதிக்குச் செய்த செலவு, முன்னணி தனியார் கல்லூரிகளில், குறிப்பாக அதிக அளவு பணம் கொடுத்து சீட் வாங்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பிள்ளைகள் படித்தால் அதற்கான  வருமானம் எப்படி வந்தது என்பது போன்ற விவரங்களையெல்லாம்  அதிகாரிகள் கேட்டுத் துளைப்பார்கள். 

மேலும் 'பிக் டேட்டா' அடிப்படையில், வருமான வரிக் கணக்கே தாக்கல் செய்யாதவர்கள் இருக்கும் இடங்களும் பூகோள அடிப்படையில் கண்டறியப்பட்டு, அத்தகைய பகுதிகளில் வசிப்பவர்கள் உண்மையிலேயே  வரி கட்டும் அளவுக்குச் சம்பாதிக்காத பிரிவினர்தானா என்பதையும் அதிகாரிகள் சுலபமாக கண்டறிந்து விடுவார்கள். 

வருகிற ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்தத் திட்டம் வரி ஏய்ப்பாளர்களை எந்த அளவுக்கு வரிச் செலுத்த வைக்கும் என்பது வருகிற மாதங்களில் தெரிந்து விடும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க