விடுப்பில் வீட்டுக்குச் செல்லாத அபிநந்தன் - விமானப்படை தளத்துக்கே மீண்டும் சென்று நெகிழ்ச்சி! | IAF Pilot Abhinandan Returns to His Squadron in Srinagar

வெளியிடப்பட்ட நேரம்: 10:25 (27/03/2019)

கடைசி தொடர்பு:10:25 (27/03/2019)

விடுப்பில் வீட்டுக்குச் செல்லாத அபிநந்தன் - விமானப்படை தளத்துக்கே மீண்டும் சென்று நெகிழ்ச்சி!

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானின் பால்கோட் பகுதியில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதத் தளத்தின்மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, எல்லை அருகே அமைந்திருக்கும் இந்திய நிலைகள்மீது பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல் நடத்த முயன்றது. அதற்கு, இந்திய விமானப்படை தரப்பில் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், பாகிஸ்தானின் எஃப் 16 ரக விமானம் ஒன்று சுட்டுவீழ்த்தப்பட்டது. இந்தச் சம்பவத்தின்போது இந்திய விமானப்படை, மிக் 21 பைசான் ரக விமானம் ஒன்றை இழந்தது. அந்த விமானத்தை இயக்கிய விமானப்படை வீரர் அபிநந்தன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தரையிறங்கவே, அந்நாட்டு ராணுவம் அவரைச் சிறைபிடித்தது. பின்னர், அமைதி நடவடிக்கைக்காக என்று கூறி, கடந்த 1-ம் தேதி, வாகா எல்லையில் அபிநந்தனை இந்திய அதிகாரிகளிடம் பாகிஸ்தான் ஒப்படைத்தது. 

அபிநந்தன்

இதன்பின், அவருக்கு டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது, மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவருக்கு நான்கு வாரங்கள் மருத்துவ விடுப்பு அளிக்கப்பட்டது. இந்த விடுப்பு காலத்தை, சென்னையில் உள்ள குடும்பத்தினருடன் கழிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் மீண்டும் ஸ்ரீநகருக்கே செல்ல முடிவு எடுத்திருப்பதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.  தான் சார்ந்த விமானப்படை வீரர்களுடன் தங்குவதற்காக அவர் ஸ்ரீநகர் செல்ல உள்ளார். மருத்துவ விடுப்பை வீரர்கள் எவ்வாறு செலவழிக்கலாம் என்பது அவர்கள் விருப்பத்துக்கு உள்ளானது. அப்படி இருக்கையில், விடுப்பில்கூட அவர் விமானப் படைக்கே திரும்புவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அபிநந்தன்

இதற்கிடையே, நான்கு வார கால மருத்துவ விடுப்பு முடிந்த பிறகு, அவர் மீண்டும் பரிசோதனைக்காக டெல்லி ராணுவ மருத்துவமனைக்கு வர வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அப்போது நடக்கும் சோதனையில்தான் அபிநந்தனின் உடற்தகுதி விமானப்படையில் சேர்ந்து மீண்டும் பணிபுரிய ஏதுவாக இருக்கிறதா என்பதுகுறித்து தெரியவரும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க