`மோடியின் இன்னொரு டிராமா இது' - மம்தா பானர்ஜி சாடல்! | Today’s announcement is yet another limitless drama and publicity mongering by Modi says Mamata Banerjee

வெளியிடப்பட்ட நேரம்: 15:25 (27/03/2019)

கடைசி தொடர்பு:09:34 (28/03/2019)

`மோடியின் இன்னொரு டிராமா இது' - மம்தா பானர்ஜி சாடல்!

பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், இன்னும் சிறிது நேரத்தில் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றுவார் என அவரது ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அவர் என்ன செய்தி சொல்லப் போகிறார் என்ற மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. முதலில், 11.45 - 12 மணிக்குள் உரையாற்றுவார் எனக் கூறப்பட்ட நிலையில், 12.25 மணிக்கு மோடி பேசினார். அப்போது, ``இந்தியா இன்று மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. விண்ணில் செயற்கைக்கோள் ஒன்றைச் சுட்டுவீழ்த்தும் `மிஷன் சக்தி' சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது. இதன்மூலம் அமெரிக்க, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக விண்வெளியில் இந்தியா சாதனை படைத்துள்ளது. இது முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியே இந்தச் சோதனை நிகழ்த்தப்பட்டது. இந்த வெற்றியால் நாட்டின் பாதுகாப்பு பலம் பெறும்" என்று கூறினார். 

மம்தா பானர்ஜி

மோடியின் இந்த அறிவிப்புக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அவர், ``இந்தியாவின் செயற்கைக்கோள் திட்டம் பல ஆண்டுகளாக உலகத்தரம் வாய்ந்ததாக இருக்கிறது. நமது விஞ்ஞானிகளை நினைத்து நாங்கள் எப்பொழுதும் பெருமிதம் கொள்கிறோம். ஆராய்ச்சி, விண்வெளி மேலாண்மை தொடர்ச்சியாக பல ஆண்டுகளாகச் சாதனை படைத்து வருகிறது இந்தியா. அதேபோன்றுதான் இந்த மிஷன் சக்தியும். வழக்கம்போல் இதிலும் மோடி தனது பெருமையைத் தேடிக்கொள்ள நினைக்கிறார். இந்தச் சாதனைக்குச் சொந்தக்காரர்கள் நமது விஞ்ஞானிகள்தான். இன்றைய அறிவிப்பு மோடியின் மற்றுமொரு டிராமா ஆகும். தேர்தல் நேரத்தில் இதை தன் பெயரில் விளம்பரப்படுத்தி அரசியல் நன்மைகளைப் பெற முயல்கிறார். இந்த அறிவிப்பு ஒரு விதிமீறல் நடவடிக்கை ஆகும்.

மோடி அரசாங்கத்தின் காலம் முடிந்த நிலையில், எந்த மிஷன் குறித்தும் அறிவிப்பதற்கோ அல்லது நடத்துவதற்கோ இப்போது எந்த அவசரமும் இல்லை. மோடியின் அறிவிப்பு பா.ஜ.க என்ற படகு உடனடியாக மூழ்குவதிலிருந்து காப்பாற்றுவதைப் போல் உள்ளது. இது தொடர்பாக நாங்கள் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்ய உள்ளோம்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

இதேபோல் மோடியின் இந்த அறிவிப்பைக் கிண்டல் செய்துள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. அவர் வெளியிட்டுள்ள ட்விட்டரில் பதிவில், ``விஞ்ஞானிகளுக்கு முதலில் வாழ்த்துகள். உங்கள் உழைப்பை நினைத்துப் பெருமை கொள்கிறேன். அதேபோல் பிரதமர் மோடிக்கும் வாழ்த்துகள் சொல்லிக்கொள்கிறேன். அவருக்கு உலக நாடக தின வாழ்த்துகள்" எனக் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க