`அந்தப் பிம்பத்தில் இருந்து என்னை விலக்கிப் பாருங்கள்!’ - காங்கிரஸில் இணைந்த இந்தியன் பட நாயகி | Urmila Matondkar Joins Congress

வெளியிடப்பட்ட நேரம்: 19:10 (27/03/2019)

கடைசி தொடர்பு:09:40 (28/03/2019)

`அந்தப் பிம்பத்தில் இருந்து என்னை விலக்கிப் பாருங்கள்!’ - காங்கிரஸில் இணைந்த இந்தியன் பட நாயகி

ரங்கீலா, இந்தியன் போன்ற படங்களில் நடித்த முன்னணி பாலிவுட் நட்சத்திரம் ஊர்மிளா மடோன்கர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இன்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியைச் சந்தித்தப் பிறகு இதை அறிவித்தார். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கத்திலும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ஊர்மிளா

காங்கிரஸ் கட்சியில் இணைந்தது குறித்து ஊர்மிளா செய்தியாளர்களிடம், ``தற்போதுதான் அரசியலில் முதல் அடியை எடுத்துவைத்துள்ளேன். எங்கள் குடும்பத்தின் அரசியல் பார்வை, மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு மற்றும் சர்தார் வல்லபபாய் படேலின் கொள்கைகளைச் சார்ந்ததாகும். கல்வித்துறை சார்ந்த குடும்பத்திலிருந்து வந்த நான், திரைப்பட நடிகையானேன். அதேபோல தற்போது அரசியலுக்கு வந்துள்ளேன். எனது சிறுவயதிலிருந்தே சமூக விழிப்புணர்வு குறித்த ஆர்வம் உண்டு" என்றார்.

இவர் 1983-ல் மசூம் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 1995-ல் இவர் நடித்த ரங்கீலா திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற்றதும் புகழின் உச்சத்துக்குச் சென்றார். தொடர்ச்சியாகப் பல இந்திப் படங்களில் நடித்தவர், கமலோடு இணைந்து இந்தியன் திரைப்படத்திலும் நடித்தார்.

ஊர்மிளா

பொதுவாக திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வருபவர்களை அவர்களது திரையுலக பிம்பத்தை, கவர்ச்சியை மையமாக வைத்து வாக்குகளைச் சேகரிக்கப் பயன்படுத்துவார்கள். ஆனால், தன்னை அதிலிருந்து விலக்கிப் பார்க்க வேண்டுமென்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். அநேகமாக மும்பை தேர்தல் களத்தில், காங்கிரஸ் கட்சி சார்பாக வேட்பாளராக இறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.