பணமோசடியில் ஈடுபட்டதாக பா.ஜ.க தேசியப் பொதுச் செயலாளர் முரளிதரராவ் மீது வழக்கு! | Case filed against BJP NS muralidhar rao in Hyderabad

வெளியிடப்பட்ட நேரம்: 19:02 (27/03/2019)

கடைசி தொடர்பு:19:02 (27/03/2019)

பணமோசடியில் ஈடுபட்டதாக பா.ஜ.க தேசியப் பொதுச் செயலாளர் முரளிதரராவ் மீது வழக்கு!

மத்திய அரசுப் பணி வாங்கித் தருவதாகக் கூறி ரூ.2.10 கோடி பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக பா.ஜ.க தேசியப் பொதுச்செயலாளர் முரளிதரராவ் உள்ளிட்ட 9 பேர் மீது ஹைதராபாத் போலீஸார் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். 

முரளிதரராவ்

ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரவன்ன ரெட்டி என்பவர் சரூர் நகர் காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்திருக்கிறார். அந்தப் புகாரில், மத்திய வர்த்தகத் துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் இருந்தபோது, அந்தத் துறையில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி முரளிதர ராவின் உறவினர்களான கிருஷ்ண கிஷோர் மற்றும் ஈஸ்வர ரெட்டி ஆகியோர் ரூ.2.10 கோடி பணம் பெற்று தன்னை ஏமாற்றிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். கிருஷ்ண கிஷோர், முரளிதர ராவின் நிழல் போன்றவர் என்றும், அவரால் மத்திய அரசுத் துறைகளில் நியமனப் பணிகளைப் பெற்றுத்தர முடியும் என்றும் கூறி தன்னிடம் மோசடியில் ஈடுபட்டதாகப் புகார் தெரிவித்திருக்கிறார். 

முரளிதரராவ் விளக்கம்

 

இதுதொடர்பாக சரூர் நகர் போலீஸார் கிருஷ்ண கிஷோர், ஈஸ்வர ரெட்டி, முரளிதர ராவ் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். இதில், முரளிதர ராவின் பெயர் 8-வது பெயராகச் சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்தப் புகார் குறித்து ட்விட்டரில் விளக்கமளித்துள்ள முரளிதர ராவ், `என் மீதான இந்தக் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது. மக்களவைத் தேர்தல் நெருங்கும் சூழலில் எனது மரியாதை மற்றும் மதிப்பைக் குலைக்கும் வகையில் சதி செய்யப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக உரிய முறையில் வழக்கறிஞர்கள் மூலம் நடவடிக்கை எடுக்க இருக்கிறேன்’ என்று தெரிவித்திருக்கிறார்.