`இது புதுசு இல்லையாம் 2012-லையே இருந்துச்சாம்'- மிஷன் சக்தியின் முன் வரலாறு | Drdo already have a A-SAT Technology in year 2012

வெளியிடப்பட்ட நேரம்: 18:53 (27/03/2019)

கடைசி தொடர்பு:18:53 (27/03/2019)

`இது புதுசு இல்லையாம் 2012-லையே இருந்துச்சாம்'- மிஷன் சக்தியின் முன் வரலாறு

மிஷன் சக்தி

வானில் இருக்கும் செயற்கைக்கோளைத் தாக்கி அழிக்கும் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாகப் பரிசோதித்து விட்டதாக அறிவித்திருக்கிறார் பிரதமர் மோடி. இன்று மதியம் நேரலையில் நாட்டு மக்களிடம் உரையாடிய பிரதமர், மிஷன் சக்தியின் மூலமாக விண்வெளியில் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது என்றும் தெரிவித்தார். இந்த ஏவுகணையை வைத்திருக்கும் நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, ரஷ்யா, மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக தற்பொழுது இந்தியாவும் இணைந்திருக்கிறது. தேர்தலை மையமாக வைத்து ஆதாயம் பெரும் நோக்கிலேயே மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் என்ற விமர்சனங்கள் பல தரப்பிலிருந்தும் எழுந்தன. இந்நிலையில், செயற்கைக்கோளைத் தாக்கி அழிக்கும் தொழில்நுட்பம் கடந்த  2012-ம் ஆண்டிலேயே பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) கைவசம் இருந்ததாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. 2012-ம் ஆண்டில்  இந்தியா டுடேவுக்கு அளித்த பேட்டி ஒன்றில் இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கிறார் அன்றைக்குப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவராக இருந்த வி.கே.சரஸ்வத்.

வி.கே. சரஸ்வத்

அப்போது வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்ட அக்னி -V ஏவுகணையை `கேம் சேஞ்சர்" எனத் தெரிவித்திருக்கும் அவர்,  `` இது வானில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் திறனைக் கொடுக்கும். இதைப் பின்பற்றி 2014-ம் ஆண்டுக்குள்ளாக முழுத் திறன் படைத்த செயற்கை கோள் எதிர்ப்பு ஏவுகணை உருவாக்கப்பட்டு விடும். ஆனால், அதை நேரடியாகப் பரிசோதிக்கும் திட்டம் எதுவும் கைவசம் இல்லை. அப்படிச் செய்யும்போது ஏற்படும் சிதறல்களால் மற்ற செயற்கைக் கோள்கள் பாதிக்கப்படும். எனவே, நேரடியாகப் பரிசோதனை செய்வதற்குப் பதிலாக மின்னணு சோதனைகள் மூலமாக A-SAT தொழில்நுட்பம் பரிசோதனை செய்யப்படும்" எனத் தெரிவித்திருந்தார்.

A-SAT ஏவுகணை

அதன் பின்னர் அந்தப் பொறுப்பிலிருந்து 2013-ம் ஆண்டில் வி.கே.சரஸ்வத் ஓய்வு பெற்று விட்டார். தற்பொழுது நிதி ஆயோக்கின் உறுப்பினராகப் பதவி வகித்து வரும் இவர் A-SAT ஏவுகணைப் பரிசோதனை வெற்றியடைந்தது குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார். ``அன்றைக்கு ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி இந்த ஏவுகணையைப் பரிசோதனை செய்ய அனுமதி அளிக்கவில்லை. ஆனால், இப்போது உள்ள அரசு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புக்கு அந்த அனுமதியைக் கொடுத்திருக்கிறது. இந்த அரசுக்கு இருக்கும் தைரியம் முந்தைய அரசாங்கத்திடம் இல்லை" என தற்போது வி.கே.சரஸ்வத் தெரிவித்துள்ளார்.