பிரதமர் மோடியின் மிஷன் சக்தி உரை குறித்து ஆய்வுசெய்து வருகிறோம்! - தேர்தல் ஆணையம் | PM Modi's Mission Shakti Speech Being Examined: Election Commission

வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (28/03/2019)

கடைசி தொடர்பு:10:14 (29/03/2019)

பிரதமர் மோடியின் மிஷன் சக்தி உரை குறித்து ஆய்வுசெய்து வருகிறோம்! - தேர்தல் ஆணையம்

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் சூழலில் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றிய விவகாரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. 

பிரதமர் மோடியின் உரை

விண்வெளியில் செயற்கைக்கோள்களைத் தாக்கி அழிக்கும் புதிய தொழில்நுட்பத்தை இந்தியா இன்று வெற்றிகரமாகப் பரிசோதனை செய்தது. இதுகுறித்து நாட்டு மக்களிடையே தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய பிரதமர் மோடி, `விண்ணில் செயற்கைக்கோள்களைச் சுட்டுவீழ்த்தும் `மிஷன் சக்தி’ சோதனையை வெற்றிகரமாக இந்தியா நிகழ்த்தியுள்ளது. இதன்மூலம் அமெரிக்க, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக விண்வெளியில் இந்தியா சாதனை படைத்துள்ளது. இந்தச் சோதனை, இந்தியாவின் செயற்கைக்கோள்களைப் பாதுகாக்கும் முயற்சிதானே தவிர, பிற நாடுகளுக்கு எதிரான சோதனை அல்ல. இதன்மூலம், செயற்கைக்கோளை துல்லியமாகத் தாக்கும் சக்தியை இந்தியா பெற்றுவிட்டது’ என்று பெருமிதம் தெரிவித்தார். 

தேர்தல் ஆணையம்


தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் சூழலில் இதுபோன்று மக்களிடையே தோன்றி உரையாற்றுவது விதிமீறல் என்று காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமாக டிஆர்டிஓ (DRDO) செய்த சாதனையைக் கூறி பெருமைப்பட்டுகொள்ளுவதாக மோடியை விமர்சித்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இது மோடியின் இன்னொரு டிராமா என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார். 

தேர்தல் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளரின் ட்வீட்

இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்துள்ள நிலையில், பிரதமர் மோடியின் உரை குறித்து ஆய்வு செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ஷேபாலி ஷரன், ``நாட்டு மக்களிடையே தொலைக்காட்சி வாயிலாக பிரதமர் மோடி இன்று உரையாற்றிய விவகாரம் தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில், அந்த விவகாரத்தில் விதிமீறல் இருக்கிறதா என்பது குறித்து அதிகாரிகளை ஆய்வு செய்ய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருக்கிறது’’ என்று ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.