``குழந்தையின் பேச்சுக்கு நான் என்ன கருத்து சொல்ல?” - ராகுலை கலாய்த்த மம்தா | "Just A Kid" - Mamata Banerjee attacks Rahul

வெளியிடப்பட்ட நேரம்: 09:45 (28/03/2019)

கடைசி தொடர்பு:10:16 (29/03/2019)

``குழந்தையின் பேச்சுக்கு நான் என்ன கருத்து சொல்ல?” - ராகுலை கலாய்த்த மம்தா

மம்தா பானர்ஜி

காங்கிரஸ் கட்சி, நாடாளுமன்றத் தேர்தலை ராகுல் தலைமையில் சந்திக்கிறது. இதற்காக, ராகுல் பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்துவருகிறார். தமிழகத்திற்குத் தேர்தல் பிரசாரத்திற்கு வந்த ராகுல், கல்லூரி மாணவிகளுடன் உரையாடினார். இந்தத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் யார் என்று காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி தரப்பில் இன்னும் அறிவிக்கவில்லை. ராகுலை முன்னிறுத்தலாம் எனத் தெரிகிறது. கடந்த சில நாள்களுக்கு முன், மேற்கு வங்கத்தில் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல், பிரதமர் நரேந்திர மோடியையும், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியையும் கடுமையாக தாக்கிப் பேசினார். மேற்கு வங்கத்தில் எந்த மாற்றமும் நிகழவில்லை. வங்காளம் ஒரு நபரால் மட்டுமே இயக்கப்படுகிறது. மம்தா யாருடனும் பேசுவது கிடையாது; யாருடைய ஆலோசனைகளையும் கேட்பது கிடையாது. மம்தாவின் ஆட்சி அவ்வளவு சிறப்பானது இல்லை. இங்கு, மக்களுக்கு சுதந்திரம் இருக்கிறதா என தாக்கிப் பேசியிருந்தார்.


இதற்குப் பதிலடிகொடுக்கும் விதமாக , காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஒரு குழந்தை என மம்தா விமர்சித்துள்ளார். ராகுலின் பேச்சு குறித்த பத்திரிகையாளர்களின் கேள்விக்கு, ``அவர் ஒரு குழந்தை. அவருக்கு என்ன தோன்றுகிறதோ அதைப் பேசுகிறார். இந்த விவகாரத்தில் நான் கருத்து சொல்வதற்கு வேறு எதுவும் இல்லை” என முடித்துக்கொண்டார். பா.ஜ.க-வினர் ராகுலை பப்பு என்று கேலி செய்துவந்த நிலையில், மம்தாவும் அதே டோனில் ராகுலை விமர்சித்துள்ளார்.