விலையுயர்ந்த 10,000 கார்கள், செல்ஃப் டிரைவ் வசதி என அதிரடி காட்டும் ஓலா! | Ola to launch self-drive service

வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (28/03/2019)

கடைசி தொடர்பு:13:40 (28/03/2019)

விலையுயர்ந்த 10,000 கார்கள், செல்ஃப் டிரைவ் வசதி என அதிரடி காட்டும் ஓலா!

ஓலா கால் டாக்ஸி நிறுவனம், அடுத்தகட்ட வளர்ச்சிக்காக 500 மில்லியன் டாலர்களை முதலீடு செய்ய உள்ளது. இதன்மூலம், அவர்களின் சேவையில் மேலும்  10000 கார்கள் இணைக்கப்பட உள்ளன. அதன்பின்னர், 'செல்ஃப் டிரைவ்' பயன்பாட்டிற்கு ஓலா கார்களை ஈடுபடுத்த உள்ளார்கள். இதில், ஓலா கார்களை சொந்த காரைப்போல சுயமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். செல்ஃப் டிரைவ் செய்ய விரும்பும் கார்ப்பரேட் அலுவலர்களின் மனதைக் கவரும் விதமாக, அதிக விலையுயர்ந்த சேடன், எஸ்யூவி கார்களையும் ஓலா நெட்வொர்க்கில் இணைக்க உள்ளார்கள்.

ஓலா

ஏற்கெனவே, இந்த மாதம் தொடக்கத்தில் ஹூண்டாய் மோட்டார் மற்றும் கியா மோட்டார்ஸ் நிறுவனங்களின்மூலம் 300 மில்லியன் டாலர்களை ஓலா நிறுவனம் முதலீடு செய்திருந்தது. இதன்மூலம் ஊபர் நிறுவனத்துடன் வலுவான போட்டியை உருவாக்கியது. தற்போது, மேலும் 500 மில்லியன் டாலரை முதலீடுசெய்து, இந்தியா முழுவது உள்ள முக்கிய நகரங்களில் 'செல்ஃப் டிரைவ்' திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

ஓலா செல்ஃப் டிரைவ் பயன்பாட்டை, வாடகை, சந்தாமுறை அல்லது குத்தகை ஆகிய வெவ்வேறு மாடல்களில் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளார்கள். கார்ப்பரேட் நிறுவன ஊழியர்களின் வசதிக்காக, 24 மணி நேர சேவையாக இதைக் கொண்டுவர உள்ளார்கள். இதன்மூலம், இந்தியா முழுமைக்குமான போக்குவரத்து சேவையில் தனிமுத்திரை பதிப்பதில் தீவிரமாக இருக்கிறார்கள்.