நிர்மலா சீதாராமனின் கையொப்பத்தை போலியாகப் போட்டு மோசடி: பா.ஜ.க முரளிதர ராவ் மீது வழக்கு! | BJP leader Muralidhar Rao among 8 booked for ‘forging’ Nirmala Sitharaman’s signature

வெளியிடப்பட்ட நேரம்: 13:55 (28/03/2019)

கடைசி தொடர்பு:10:20 (29/03/2019)

நிர்மலா சீதாராமனின் கையொப்பத்தை போலியாகப் போட்டு மோசடி: பா.ஜ.க முரளிதர ராவ் மீது வழக்கு!

த்திய அரசில் நியமனப் பதவி வாங்கித்தருவதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கையொப்பத்தை போலியாகப் போட்டு மோசடி செய்ததாக, பா.ஜ.க தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் உள்பட 8 பேர்மீது தெலங்கானா மாநில போலீஸார் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். 

முரளிதர ராவ்

முரளிதர ராவுக்கு மிகவும் நெருங்கிய நண்பர், ஈஸ்வர ரெட்டி. கட்சியின் இதர முக்கிய நிர்வாகிகளிடம் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தார். இந்த நிலையில், தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பிரவர்ணா ரெட்டி என்ற பெண், சரூர்நகர் காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட உள்ளூர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்த மனுவில், " நானும் எனது கணவரும், 2016-ம் ஆண்டு ஈஸ்வர ரெட்டியைச் சந்தித்தபோது, தன்னால் மத்திய அரசு நியமனப் பதவியை, அதாவது பார்மா எக்சில் அமைப்பின் தலைவர் பதவியை வாங்கித் தர முடியும் என்று கூறினார். 

முரளிதர ராவின் நம்பிக்கைக்குரிய கிருஷ்ண கிஷோர் ராவ் என்பவர், இந்தப் பதவியை வாங்கித்தருவார் என்றும் கூறினார். அதைத் தொடர்ந்து, எங்களிடம் 2.17 கோடி ரூபாயை வாங்கிக்கொண்டு,  பார்மா எக்சில் அமைப்பின் தலைவராக எனது கணவர் நியமிக்கப்பட்டதாக  நிர்மலா சீதாராமனின் கையொப்பமிடப்பட்ட  போலியான கடிதத்தையும் காட்டினார். அப்போது, நிர்மலா சீதாராமன் வர்த்தகத் துறை அமைச்சராக இருந்தார். ஆனால், எங்களுக்கு பதவி கிடைக்கவில்லை. பணத்தை திருப்பிக் கேட்டபோது, முரளிதர ராவ் உள்ளிட்டோர் எங்களை மிரட்டினார்கள்" என்று கூறியிருந்தார். 

இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் சரூர்நகர் காவல் நிலையத்தில் முரளிதர ராவ், கிஷோர் ராவ் உள்ளிட்ட 8 பேர் மீது மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ஆனால், தம்மீதான புகாரை மறுத்துள்ள முரளிதர ராவ், " தற்போதுள்ள பிரச்னைக்கும், எஃப்ஐஆர்-க்கும் எனக்கும் தொடர்பில்லை. நீதிமன்றத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் என்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸார் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பார்கள். நீதிமன்றத்தின் முன் குற்றவாளிகளை என்னுடைய வழக்கறிஞர்கள் நிறுத்த உதவிசெய்வார்கள்" என்று ட்விட்டரில் கூறியுள்ளார். 

இதனிடையே, தெலங்கானா பா.ஜ.க மாநில தலைமைச் செய்தித்தொடர்பாளர் கிருஷ்ணா சாகர் ராவ் இது குறித்து கூறுகையில், " எங்களுடைய தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் மீது  வேண்டுமென்றே சிலரால், கெட்டநோக்கத்துடன் புகார் கொடுக்கப்பட்டு, முதல்தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டுள்ளது. அவர், தவறு எதுவும் செய்யவில்லை என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்க சதித் திட்டம் தீட்டுபவர்கள், கடும் பின் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்" என எச்சரித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க