12 வயது மாணவரை பேட்டால் அடித்துக்கொன்ற மாணவர்கள்! - பள்ளி நிர்வாகம் செய்ததுதான் கொடுமையிலும் கொடுமை | School student beaten to death by his seniors

வெளியிடப்பட்ட நேரம்: 16:33 (28/03/2019)

கடைசி தொடர்பு:16:33 (28/03/2019)

12 வயது மாணவரை பேட்டால் அடித்துக்கொன்ற மாணவர்கள்! - பள்ளி நிர்வாகம் செய்ததுதான் கொடுமையிலும் கொடுமை

உத்தரகாண்ட் மாநிலம் டெஹ்ராடூனில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற சம்பவமும் அதன் பின்னர் அந்தக் கொலையை மறைக்கப் பள்ளி நிர்வாகம் எடுத்த முயற்சிகளும் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

பள்ளி மாணவர் கொலை

சமீபகாலமாகப் பள்ளி மாணவர்களுக்கு நடக்கும் கொடுமைகள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாகத் தனியார் பள்ளிகளில் நடக்கும் கொடூரச் சம்பவங்கள், அவை வெளியே தெரிந்தால், பள்ளியின் பெயர் கெட்டுப்போகும் என அஞ்சி பள்ளி நிர்வாகம் எடுக்கும் முயற்சிகள் அவ்வப்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. 

உத்தரகாண்ட் மாநிலம் டெஹ்ராடூனில் நடைபெற்றிருப்பதும் இத்தகைய கொடூரச் செயல்தான், தனியார் பள்ளியில் படிக்கும் 12 வயது மாணவர் வசு யாதவ். இவரை அதே பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவர்கள் கிரிக்கெட் பேட் மற்றும் ஸ்டம்புகள் கொண்டு கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் வசு யாதவ்  மயங்கிச் சுருண்டு விழுந்துள்ளார். பின்னர் அந்த மாணவர்கள் அங்கிருந்து சென்றுவிட, சுமார் ஒருமணி நேரம் கழித்து, விடுதி வார்டன், பார்த்து மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றிருக்கிறார். 

ஆனால், மருத்துவமனையில் மாணவர் இறந்துவிட்டதாகத் தெரிவிக்க, பள்ளி நிர்வாகம் உடனடியாக வசு யாதவின் உடலை பெற்றுக்கொண்டு சென்றுவிட்டனர். மறுபுறம் வசு யாதவைக் காணாமல் உறவினர் தேடினர். போலீஸில் புகாரும் அளிக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில் சீனியர் மாணவர்கள் தாக்கியதில் பலியான மாணவர் வசு யாதவின் உடலை பள்ளி நிர்வாகம் யாருக்கும் தெரியாமல் பள்ளி வளாகத்திலேயே புதைத்திருக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மாணவரின் பெற்றோருக்குக் கூட தெரிவிக்கவில்லை. 

காவல் கண்காணிப்பாளர்

இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக பேசிய காவல் கண்காணிப்பாளர் நிவேதிதா, ``ஒரே பள்ளியில் படிக்கும் சீனியர் மாணவர்கள் இருவரால் தாக்கப்பட்டதில் வசு யாதவ் பலியாகியுள்ளார். கொடூரமாகத் தாக்கிய மாணவர்கள் பின்னர் அவர் மீது அதிக குளிர் தன்மை கொண்ட தண்ணீரை ஊற்றி கொடுமை செய்திருக்கின்றனர். இந்த விசாரணையின்போது பள்ளி தரப்பிலும் பல்வேறு தவறுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தாமதமாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றது, கொலைக்கான தடையங்களை அழிக்க முயன்றது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர்’ என்றார். மேலும் விசாரணையில், சீனியர் மாணவர்கள் வைத்திருந்த பிஸ்கட் பாக்கெட்டை வசு யாதவ் எடுத்ததால் இந்தத் தாக்குதல் நடைபெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த வழக்கில் விடுதி மேலாளர், வார்டன் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் ஆகியோர் மீது  தடையங்களை அழிக்க முயன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை செய்த மாணவர்கள் இருவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 5 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளி மாணவர்களின் செயல் தரும் அதிர்ச்சியைவிட, அதை மறைக்க முயன்ற பள்ளி நிர்வாகத்தின் முயற்சிகள் அதிக அதிர்ச்சி அளிப்பதாக உள்ளதாக அச்சம் தெரிவிக்கின்றனர் மக்கள்!