சபரிமலை வன்முறை - கேரள பா.ஜ.க வேட்பாளருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! | Kerala court sends BJP candidate to 14 day Judicial custody

வெளியிடப்பட்ட நேரம்: 20:19 (28/03/2019)

கடைசி தொடர்பு:10:36 (30/03/2019)

சபரிமலை வன்முறை - கேரள பா.ஜ.க வேட்பாளருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்!

சபரிமலை வன்முறை தொடர்பான வழக்கில் கேரள மாநிலம் கோழிக்கோடு மக்களவைத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் பிரகாஷ் பாபுவை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க பத்தினம்திட்டா நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. 

சபரிமலை வன்முறை

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் அனைத்து வயதுப் பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 28-ல் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க.மற்றும் சங்க்பரிவார் அமைப்புகள் உள்ளிட்டவைகள் கேரளா முழுவதும் போராட்டம் நடத்தின. பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு சபரிமலையில் பெண்கள் செல்ல வழிவகை செய்தது. அதேபோல், சபரிமலையில் வழிபட முயன்ற பெண்களுக்கு எதிராக சரணகோஷ போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டங்களின்போது நடைபெற்ற வன்முறைகள் தொடர்பாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 

சபரிமலை போராட்டம்

அந்தவகையில், கேரள மாநிலம் கோழிக்கோடு மக்களவைத் தொகுதி பா.ஜ.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரகாஷ் பாபு, நடுத்தர வயதுடைய பெண் ஒருவரைத் தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கை விசாரித்த பத்தினம்திட்டா நீதிமன்றம், அவரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட்டிருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக கேரள உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்திருந்த முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் அவருடன் சேர்த்து 7 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது சபரிமலை விவகாரம் குறித்து பிரசாரம் செய்யக்கூடாது என்றும். சபரிமலை விவகாரம் குறித்து பிரசாரம் செய்வது தேர்தல் விதிமுறையை மீறும் செயல் எனவும் கேரள மாநிலத் தேர்தல் அதிகாரி டீக்கா ராம் மீனா எச்சரிக்கை விடுத்திருந்தார். நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. கேரளாவில் ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடக்கிறது.