நவராத்திரி தினத்தில் நல்ல செய்தி வரும் - ராகுல் சந்திப்புக்குப் பின் சத்ருகன் சின்ஹா பேட்டி | BJP leader Shatrughan Sinha to join Congress on April 6

வெளியிடப்பட்ட நேரம்: 08:25 (29/03/2019)

கடைசி தொடர்பு:10:40 (30/03/2019)

நவராத்திரி தினத்தில் நல்ல செய்தி வரும் - ராகுல் சந்திப்புக்குப் பின் சத்ருகன் சின்ஹா பேட்டி

சத்ருகன் சின்ஹா

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதத்தில் தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. மார்ச் -23 ம் தேதி பீகாரில் உள்ள 40 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க. பாட்னா சாகிப் தொகுதி தனக்குதான் என மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த நடிகரும், அரசியல்வாதியுமான சத்ருகன் சின்ஹாவுக்கு பெருத்த ஏமாற்றம் காத்திருந்தது. அந்தத் தொகுதி மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு ஒதுக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக மோடி மற்றும் பா.ஜ.கவின் திட்டங்களை அவர் கடுமையாக சாடிவந்தார். இதனால், அவர் மீது அதிருப்தியில் இருந்த கட்சி மேலிடம் ரவி சங்கர் பிரசாத்துக்கு வாய்ப்பு வழங்கியதாகக் கூறப்படுகிறது. பாட்னா தொகுதியில் இரண்டு முறை வெற்றிவாகை சூடிய சத்ருகன் சின்ஹா தனது அதிருப்தியை வெளியிட்டார். கட்சி மேலிடம் அவரை கண்டுகொள்ளாததால் பா.ஜ.கவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தியை டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார் சத்ருகன். இந்தச் சந்திப்புக்குப் பின்னர் ராகுலுடன் தான் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்ட சத்ருகன் சின்ஹா, ``பா.ஜ.கவிலிருந்து நான் விலகுவதை வலிமிகுந்ததாக உணர்கிறேன். என் அன்பான நண்பன் லாலுவுடன் இணைந்து பணியாற்றவுள்ளேன். நேரு குடும்பத்தினர் நாட்டைக் கட்டமைத்தவர்கள் என நம்புகி்றேன்” என ட்வீட் செய்திருந்தார்.

இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய சத்ருகன், ``நவராத்திரி தினத்தன்று உங்களுக்கு நல்ல செய்தியைத் தெரிவிப்போம். ராகுலுடனான சந்திப்பு எனக்கு புத்துணர்ச்சியை அளித்துள்ளது. அவர் என்னை விட வயதில் சிறியவர். ஆனால், இன்று நாட்டின் பிரபலமான தலைவராக உள்ளார்” எனப் பேசினார்.

ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்திற்காக பீகார் செல்லும் போது ராகுல் காந்தி முன்னிலையில் சத்ருகன் சின்ஹா காங்கிரஸில் இணைவார் எனத் தெரிகிறது. பாட்னா சாகிப் தொகுதியில் அவர் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுவார் என்ற தகவலும் வருகிறது.