நமது ஏவுகணையாலேயே தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டதா ராணுவ ஹெலிகாப்டர்? | Indian missile fired Mi17 V5 chopper?

வெளியிடப்பட்ட நேரம்: 14:05 (29/03/2019)

கடைசி தொடர்பு:14:05 (29/03/2019)

நமது ஏவுகணையாலேயே தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டதா ராணுவ ஹெலிகாப்டர்?

கடந்த பிப்ரவரி மாதம் 27-ம் தேதி, இந்திய ராணுவத்தைச் சேர்ந்த Mi17 V5 ரக ராணுவ ஹெலிகாப்டர், ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரிலிருந்து காலை 10 மணியளவில் புறப்பட்டு, புட்காம் நகர் அருகே செல்லும்போது திடீரென வானத்தில் தீப்பிடித்து வீழ்ந்தது. அந்த விபத்தில், ஆறு ராணுவ வீரர்களும், பொதுமக்களில் ஒருவரும் பலியானார்கள். இந்த ஹெலிகாப்டர் விபத்துக்கு முந்தைய தினம்தான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியான பால்கோட்டில் இந்திய விமானங்கள் வெற்றிகரமாகக் குண்டுவீசிவிட்டு வந்தன. எனவே, இந்த ஹெலிகாப்டர் விபத்துக்கு ஏதேனும் சதித்திட்டம் காரணமாக இருக்குமோ என்ற கோணத்தில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

ஹெலிகாப்டர் விபத்து

தற்போது, நம்முடைய ராணுவத்தின் வான்வெளிப் பாதுகாப்பு ஏவுகணையாலேயே இந்த Mi17 V5 ரக ஹெலிகாப்டர் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சிகரமான தகவல் விசாரணையின்மூலம் தெரியவந்துள்ளது. வான்வெளித்தாக்குதல் நடவடிக்கைகளின்போது, நமது நாட்டின் எல்லைக்குள் பறக்கும் விமானங்கள் நம்முடைய விமானங்களா அல்லது எதிரி நாட்டு விமானங்களா என அடையாளம் காணும் ஐஎஃப்எஃப் (Identity, Friend or Foe) என்ற சிஸ்டம் செயல்படுகிறது. அந்த சிஸ்டத்தில் நேர்ந்த தவற்றின் காரணமாக, எதிரி நாட்டு ஹெலிகாப்டர் என நினைத்து சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஹெலிகாப்டர்

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான 2019, பிப்ரவரி 27-ம் தேதி காலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த 25 ஜெட் விமானங்கள் இந்திய எல்லையைத்தாண்டி ஊடுருவ உள்ளதாக எச்சரிக்கை வந்திருக்கிறது. அதேபோல, தாழ்வாகப்பறக்கும் ஆளில்லாத உளவு விமானம் ஒன்றும் எல்லை கடந்து வருவதாகவும் எச்சரிக்கை வந்துள்ளது. இந்த ஹெலிகாப்டரைத்தான் உளவு விமானம் என்று தவறாகக் கணித்து சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து, ஐஎஃப்எஃப் சிஸ்டத்தில் ஏற்பட்ட தவறு குறித்து விசாரணை மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.