`இன்னும் ஒருமுறை அதிகாரம் வழங்கினால், அவ்வளவுதான்!'- மோடிக்கு எதிராக வெற்றிமாறன், 102 இயக்குநர்கள் | 100 film makers came against BJP government

வெளியிடப்பட்ட நேரம்: 15:02 (29/03/2019)

கடைசி தொடர்பு:15:15 (29/03/2019)

`இன்னும் ஒருமுறை அதிகாரம் வழங்கினால், அவ்வளவுதான்!'- மோடிக்கு எதிராக வெற்றிமாறன், 102 இயக்குநர்கள்

நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அனைத்துக்கட்சி தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். முதல் மற்றும் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் முடிந்துவிட்டது. மற்ற இடங்களுக்கான வேட்பாளர்கள் தேர்வும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள், மீண்டும் மோடியை ஆட்சியில் அமரவைப்பார்களா அல்லது ராகுலுக்கு ஒரு வாய்ப்பு வழங்குவார்களா என விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. 

மோடி ராகுல்

இந்நிலையில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து, சுமார் 100 திரைப்பட இயக்குநர்கள் ஒன்றாக நாட்டு மக்களுக்கு ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அவர்களின் கோரிக்கை, ஆளும் பா.ஜ.க கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் கூட்டறிக்கையில், பா.ஜ.க- வை ஆட்சியில் இருந்து அகற்றும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த இயக்குநர்கள் பட்டியலில், வெற்றிமாறன், கோபி நயினார், திவ்யா பாரதி, சனல்குமார் உள்ளிட்டவர்கள் உள்ளனர். 

 இயக்குநர்கள் வெற்றிமாறன் 0 கோபி நயினார்

இது தொடர்பாக அவர்கள் www.artistuniteindia.com இணையத்தில், `நாட்டு மக்களுக்கு ஒரு கோரிக்கை’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், ``நமது நாடு தற்போது சோதனையான காலகட்டத்தில் இருக்கிறது. கலாசாரரீதியாகவும், புவியியல் ரீதியாகவும் நாம் பிரிந்திருந்தாலும், ஒரு நாடாக நாம் இணைந்து இருக்கிறோம். அதுவே இந்த நாட்டின் குடிமகன்களான நமக்கு நல்ல உணர்வைத் தருகிறது. 
ஆனால், தற்போது அவையெல்லாம் வெறும் வார்த்தையாகத்தான் இருக்கிறது. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில், நாம் சரியாக செயல்படாமல் போனால், பாசிசம் நம்மை கடுமையாகத் தாக்கும். மதரீதியாக நாடு செல்வது என்பது நாம் கேட்டிராத இந்தியா. பா.ஜ.க தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அவர்கள் கும்பல் மற்றும் மாட்டு அரசியல் மூலமாகவும் நாட்டில் பிரிவினையை ஏற்படுத்துகிறார்கள். இவர்களின் ஆட்டத்தில் தலித்துகள் மற்றும் இஸ்லாமியர்கள்  ஓரங்கப்பட்டுகிறார்கள். இணையதளம் மற்றும் சமூகவலைதளம் மூலம் தங்களின் வெறுப்பு அரசியலை அவர்கள் பரப்புகிறார்கள். 

தேசபக்தி என்பதுதான் அவர்களின் துருப்புச் சீட்டு. யாராவது அவர்களுக்கு எதிராகச் செயல்பட்டால், அவர்களை தேசத் துரோகிகள் என்பார்கள். தேசபக்தி என்ற ஒன்றைச் சொல்லி, அவர்கள் வாக்குவங்கியை ஏற்படுத்தியுள்ளனர். இவர்களின் அதிருப்தியால், நாம் சில எழுத்தாளர்களையும் படைப்பாளர்களையும்,  ஊடகவியலாளர்களையும் இழந்திருக்கிறோம். அதனை நாம் மறந்துவிடக் கூடாது. 
ராணுவத்தைப் பயன்படுத்துவதும் அவர்களின் திட்டங்களில் ஒன்று. தேவையில்லாத போர்மூலம் நாட்டை ஆபத்தில் வைப்பார்கள். தேசிய நிறுவனங்களில், அந்த நிறுவனத்துக்குத் தொடர்பில்லாத நபர்களைத் தலைமையிடத்தில் அமரவைத்து, உலகமே நம்மைப் பார்த்து சிரிக்கும்படி செய்கிறார்கள். திரைப்படங்கள் மற்றும் புத்தகங்களுக்குத் தடை விதிப்பது மற்றும் சென்சார் போன்ற நடவடிக்கைகள்மூலம் மக்களுக்கு உண்மை தெரியாதபடி பார்த்துக்கொள்கிறார்கள். 

மோடி

விவசாயிகளை மறந்தே விட்டார்கள். பா.ஜ.க, இந்தியாவின் வளங்களை, சொத்துகளைத் தொழிலதிபர்களுக்கு வசதியாக வழங்கியுள்ளது. இவர்களின் மோசமான பொருளாதார கொள்கையினால் ஏற்பட்ட பெரும் பேரழிவுகளை, மூடிமறைத்து, வெற்றிபெற்றதுபோல ஜோடிக்கிறார்கள். பொய்யான பரப்புரைகள் மூலம், இதனை அவர்கள் சாத்தியமாக்குகிறார்கள். இதன்மூலம் அவர்கள், நாட்டில் பொய்யான அல்லது தவறான நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறார்கள். 

வரலாறு மற்றும் புள்ளியியல்களை அவர்களுக்குத் தேவையானதுபோல மாற்றுவார்கள். இன்னும் ஒருமுறை அவர்களுக்கு அதிகாரம் வழங்கினால், அது மிகப்பெரிய தவறாக அமைந்துவிடும். உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தை சவப்பெட்டியில் வைத்து அடிக்கும் கடைசி ஆணியாக அது இருக்கும். 

சென்சார்

இந்த ஆபத்தான ஆட்சி மீண்டும் அதிகாரத்துக்கு வராமல் இருக்க, உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்'' என்று கேட்டுக்கொள்கிறோம். இந்திய அரசியலமைப்பின்படி, உங்களின் அரசாங்கத்தைத் தேர்வுசெய்யுங்கள். அந்த அரசாங்கம், நமது பேச்சுரிமையை கருத்துரிமையை வழங்குவதாக இருக்க வேண்டும். ஆம்... இதுவே உங்களின் கடைசி வாய்ப்பு!” என குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்கீழ் 103 இயக்குநர்கள் கையொப்பமிட்டுள்ளனர். 

திரையுலகப் படைப்பாளர்களின் இந்தக் கூட்டறிக்கையால், ஆளும் பா.ஜ.க தரப்பு ஆடிப்போய் உள்ளது.