விவசாயிகளின் நண்பன் மண்புழுவா, குமாரசாமியா, எடியூரப்பாவா? - வைரலான வினாத்தாள்! | Question paper went viral

வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (29/03/2019)

கடைசி தொடர்பு:10:54 (30/03/2019)

விவசாயிகளின் நண்பன் மண்புழுவா, குமாரசாமியா, எடியூரப்பாவா? - வைரலான வினாத்தாள்!

எட்டாம் வகுப்பு கன்னட மொழித்தேர்வில் `விவசாயிகளின் நண்பன் யார்?' என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்காகக் கொடுக்கப்பட்ட பதில்களில், முன்னாள் முதல்வர் எடியூரப்பா, தற்போதைய முதல்வர் குமாரசாமி மற்றும் மண்புழு ஆகிய மூன்று சாய்ஸ்கள் இடம்பெற்றுள்ளன.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மிகவும் கடினமாக கேள்விகளாகக் கேட்கப்பட்டுள்ளதாக அனைவரும் புலம்பிக்கொண்டிருக்கும்வேளையில், பெங்களூருவிலுள்ள தனியார் பள்ளியின் தேர்வில் கேட்கப்பட்ட ஒரு கேள்வி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. 

வினாத்தாள்

பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரிலுள்ள தனியார் பள்ளியில் முழு ஆண்டுத்தேர்வுகள் நடந்து வருகின்றன. அதில் எட்டாம் வகுப்பு கன்னட மொழித்தேர்வில் `விவசாயிகளின் நண்பன் யார்?' என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்காகக் கொடுக்கப்பட்ட பதில்களில், முன்னாள் முதல்வர் எடியூரப்பா, தற்போதைய முதல்வர் குமாரசாமி மற்றும் மண்புழு ஆகிய மூன்று சாய்ஸ்கள் இடம்பெற்றுள்ளன. விவசாயிகளின் நண்பன் மண்புழு என்பது தெரிந்த பதில் என்றாலும் மிச்சமுள்ள இரண்டு சாய்ஸ்களில் வேறு உயிரினம் எதுவும் கொடுக்கப்படாமல் இரண்டு அரசியல் தலைவர்களின் பெயரைச் சேர்த்தது ஏன் என்று தெரியவில்லை.

குமாரசாமி

தேர்வு முடிந்தபின் வினாத்தாளைப் பார்த்த மாணவர்களின் பெற்றோரில் சிலர் அந்த வினாத்தாளைப் படம்பிடித்து வாட்ஸ் அப்பில் அனுப்ப, உடனே வைரலாகிவிட்டது. அதன்பின்னரே அதுகுறித்து பள்ளி நிர்வாகத்திற்குத் தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தெரியவந்த பள்ளி முதல்வர், வினாத்தாளைத் தயாரித்தவரை அழைத்து விசாரித்த உடனே பணிநீக்கம் செய்துவிட்டார். தேர்வுக்கு முன்னரே அந்த வினாத்தாள், பள்ளி நிர்வாகத்தினரின் பார்வைக்கு வராததால் இந்தத் தவறு நேர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அந்தக் கேள்விக்கு அனைத்து  மாணவர்களுமே மண்புழு என்ற சரியான விடையையே டிக் அடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.