`திருமுருகன் காந்திக்கு சிறையில் பாதரசம் கலந்த உணவு!'- மே 17 இயக்கம் அதிர்ச்சி தகவல் | Thirumurugan gandhi's food poisoned in jail, accuses May 17 movement

வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (29/03/2019)

கடைசி தொடர்பு:18:39 (29/03/2019)

`திருமுருகன் காந்திக்கு சிறையில் பாதரசம் கலந்த உணவு!'- மே 17 இயக்கம் அதிர்ச்சி தகவல்

திருமுருகன்  காந்தி  

திருமுருகன் காந்திக்கு தற்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டிருப்பதற்குச் சிறையில் அவருக்கு வழங்கப்பட்ட பாதரசம் கலந்த உணவுதான் காரணம் என்று புகார் எழுந்துள்ளது.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே நடந்த போரில் லட்சக்கணக்கான தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டனர். இதன் நினைவாக கடந்த 2017-ம் ஆண்டு சென்னை மெரினாவில் மே 17 இயக்கம் சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. தடையை மீறி நினைவு தினம் நடத்தியதாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உட்பட நான்கு பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்ட திருமுருகன் காந்தி கிட்டத்தட்ட 5 மாதங்களுக்குப் பிறகு சிறையிலிருந்து வெளியில் வந்தார்.

திருமுருகன் காந்தி

அதைத் தொடர்ந்து தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, சேலம்-சென்னை எட்டு வழிச் சாலை ஆகிய தமிழகப் பிரச்னைகள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் பேசினார். இந்தியா திரும்பியபோது பெங்களூரு விமான நிலையத்தில் திருமுருகன் காந்தியை போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட திருமுருகன் காந்தி, தனிமைச் சிறை, சுகாதாரமில்லாத உணவு போன்றவற்றால் உடல் நிலை நலிவடைந்து, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

 மே 17 இயக்கத்தின் வழக்கறிஞர் லேனா குமார்

குடற்புண், தலைவலி போன்றவற்றால் அவதியுற்ற திருமுருகன் காந்திக்கு, சென்னை எழும்பூர் மற்றும் செங்கல்பட்டு நீதிமன்றங்கள் நிபந்தனை ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து வெளியில் வந்தவர் தொடர்ந்து உடல் நிலை பாதிக்கப்பட்டார். தற்போது மீண்டும் சிகிச்சை பெற்று வருகிறார். அவரால் முன்புபோல் சரிவர இயங்க முடியவில்லை. தொடர் சிகிச்சையிலிருந்து ஓய்வு பெற்று வருவதாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் லேனா குமார் தெரிவித்தார். ``திருமுருகன் காந்திக்கு மிகவும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. தொடர் சிகிச்சையில் அவருடைய தொலைபேசி சுவிட் ஆப்பிலேயே உள்ளது. அவரால் தற்போதைக்குப் பேசமுடியாது. சிறையில் அவருக்குக் கொடுக்கப்பட்ட உணவில்தான் பிரச்னை இருந்துள்ளது. குறிப்பாக ``பாதரசம்" கலந்த உணவாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். அவருக்குக் கொடுக்கப்பட்ட உணவு குறித்துப் பரிசோதனை நடத்த அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய உள்ளேன்" என்றார்.