`குர்காம் கொடூரத் தாக்குதல்’- பாதிக்கப்பட்டவர்கள் மீதே வழக்குப்பதிவு செய்த காவல்துறை! | Gurugram mob attack: Police registers FIR against Muslim family

வெளியிடப்பட்ட நேரம்: 09:18 (30/03/2019)

கடைசி தொடர்பு:09:18 (30/03/2019)

`குர்காம் கொடூரத் தாக்குதல்’- பாதிக்கப்பட்டவர்கள் மீதே வழக்குப்பதிவு செய்த காவல்துறை!

குர்கிராம் கொடூரத் தாக்குதல்

ஹரியானா மாநிலத்தில், ஒரு குடும்பத்தினர்மீது 20 பேர் கொண்ட கும்பல்  தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான சில வீடியோக்கள் சமூகவலைதளத்தில் வெளியானது. 10 பேருக்கும் மேற்பட்ட கும்பல் கடுமையான ஆயுதங்களைக் கொண்டு ஒருவரை சரமாரியாகத் தாக்கிக்கொண்டிருந்தனர். ஒரு பெண் அவர்களிடம் விட்டுவிடுமாறு கெஞ்சுகிறார். அந்தக் கும்பல் அவரைத் தொடர்ந்து தாக்குகிறது. வீட்டின் மாடியில் சில இளம்பெண்கள், சிறுவர்கள் கதவை தாழிட்டுக்கொண்டு பயத்தால் கதறுகிறார்கள். வீட்டுக்கு வெளியில் இருக்கும் ஒரு கும்பல், கற்களைக்கொண்டு தாக்குதல் தொடுக்கின்றனர்.வீட்டில் இருந்த பொருள்கள் அனைத்தும் சூறையாடப்படுகிறது. கிரிக்கெட் விளையாடும்போது சிறுவர்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டை, இவ்வளவு பெரிய வன்முறைக்குக் காரணமாக அமைந்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த முகமது சாஜித், அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கடந்த 3 வருடங்களுக்கு முன்புதான் தமாஷ்பூர் கிராமத்திற்குக் குடிபெயர்ந்துள்ளனர். ஹோலி பண்டிகை தினத்தன்று, அவரது குழந்தைகள் அருகில் இருந்த காலி மனையில் கிரிக்கெட் விளையாடினர். கிரிக்கெட் விளையாடும்போது, இந்தச் சிறுவர்களுக்கும் மற்றொரு குழுவைச் சேர்ந்த சிறுவர்களுக்கும் தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த சிலர், சிறுவர்களைக் கடும் சொற்களால் வசைபாடினர். சிறுவர்களின் மாமா  அதைத் தட்டிக்கேட்கவும், இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் தகராறு செய்தனர். சிறுவர்களின் மாமாவின் கன்னத்தில் அறைந்துவிட்டு. `நான் யாரென்று உனக்குக் காட்டுகிறேன்' எனக் கூறி, அவர்கள் அங்கிருந்து சென்றனர். சிறிது நேரத்தில் 6 இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் அந்தச் சிறுவர்களின் வீட்டை நோக்கி வந்துள்ளனர். மேலும் சிலர், கைகளில் ஆயுதங்களைக் கொண்டுவந்தனர். அதன்பின்னர், இந்தக் கொடூர தாக்குதல் நடந்துள்ளது. இதுதொடர்பாக, முகமது சாஜித் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதில் சிலர் கைதுசெய்யப்பட்டனர்.

தாக்குதலில்  காயமடைந்தவர்கள்

இந்த நிலையில், தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர், அந்த இஸ்லாமிய குடும்பத்தினர்மீது காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அதில், “ நான் இருசக்கர வானத்தில் சென்றுகொண்டிருந்தபோது  என்மீது பந்து விழுந்தது. நான் அவர்களிடம் வாக்குவாதம் செய்தேன்.  அப்போது, அங்கு விளையாடிக்கொண்டிருந்தவர்கள் என்னை கடுமையாகத் தாக்கினர். அங்கிருந்த சிலர் என்னை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். நான் மருத்துவமனையில் இருந்து வந்த பிறகுதான் என்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட விவரம் எனக்குத் தெரியவந்தது'' எனக் கூறியுள்ளார். அவரது புகாரையடுத்து, முகமது சாஜித் குடும்பத்தினர்மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.