தேர்தல் சின்னங்களாக மாறிய சிசிடிவி கேமரா, மொபைல் சார்ஜர், பென் டிரைவ்! | New technology Election symbols!

வெளியிடப்பட்ட நேரம்: 15:25 (30/03/2019)

கடைசி தொடர்பு:15:25 (30/03/2019)

தேர்தல் சின்னங்களாக மாறிய சிசிடிவி கேமரா, மொபைல் சார்ஜர், பென் டிரைவ்!

இந்தியா சுதந்திரம் பெற்றபின் எந்தத் துறையில் வளர்ச்சியடைந்ததோ இல்லையோ, நாடெங்கிலும் உள்ள அரசியல் கட்சிகளின் எண்ணிக்கையில் அமோக வளர்ச்சி பெற்றுள்ளது. ஒவ்வொரு தேர்தலுக்கும் புதிதாக பல கட்சிகள் களமிறங்குவது வாடிக்கையாகி வருகிறது. கட்சிகள் பெருகப்பெருக அவர்களுக்கான கட்சிச் சின்னங்களும் பெருக வேண்டியது கட்டாயம். அவைபோக ஒவ்வொரு தேர்தலிலும் சுயேச்சையாகப் போட்டியிடுபவர்களின் எண்ணிக்கையும் வளர்ந்துவருகிறது. எனவே, தேர்தல் ஆணையமும் காலத்துக்கேற்ப புதிய சின்னங்களை இணைத்துவருகிறது. 

சார்ஜர்

தற்போது தேர்தல் ஆணையத்தின்வசம் 190 சின்னங்கள் உள்ளன. தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக தற்போது மக்கள் மத்தியில் அறிமுகமாகியுள்ள சிசிடிவி கேமரா, மொபைல் சார்ஜர், பென் டிரைவ், டிவி ரிமோட், கம்ப்யூட்டர் மவுஸ் போன்றவையும் சின்னங்களாக இடம்பிடித்துள்ளன. இவற்றில் மொபைல் சார்ஜர், டிவி ரிமோட் போன்றவை குக்கிராமங்களில்கூட அறிமுகமாகியுள்ளன. ஆனால் பென் டிரைவ், சிசிடிவி கேமரா போன்றவற்றை கிராமப்புற வாக்காளர்கள் மத்தியில் விளம்பரப்படுத்துவது கடினமான பணி. 

சிசிடிவி கேமரா

நடைபெறும் நாடாளுமன்றத்தேர்தலில் தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் தொகுதியில் 170 விவசாயிகள் சுயேச்சையாகக் களமிறங்கியுள்ளனர். கட்சி வேட்பாளர்களையும் சேர்த்து மொத்தம் 185 வேட்பாளர்கள் அங்கே போட்டியிடுகிறார்கள். எனவே, அந்த தொகுதியில் மட்டும் வாக்குச்சீட்டு முறை பின்பற்றப்படவுள்ளது. கிட்டத்தட்ட, தேர்தல் ஆணையத்தின் பட்டியலிலுள்ள அனைத்து சின்னங்களும் அந்தத் தொகுதி வாக்காளர்கள்முன் அறிமுகமாகும். அவற்றை எப்படி அடையாளங்கண்டு சரியாக வாக்களிப்பார்கள் என்பது கேள்விக்குறியே!