வருமான வரி ரெய்டு... அதிகாரிகளை அடக்கி வைக்குமாறு பிரதமருக்கு ஆடிட்டர்கள் கடிதம்!  | Save us from your income tax officers, they are spreading fear: CAs write to PM Modi, FM Jaitley

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (30/03/2019)

கடைசி தொடர்பு:17:00 (30/03/2019)

வருமான வரி ரெய்டு... அதிகாரிகளை அடக்கி வைக்குமாறு பிரதமருக்கு ஆடிட்டர்கள் கடிதம்! 

டப்பு நிதியாண்டில் எதிர்பார்த்த வருமான வரி வசூல் இலக்கை நிறைவேற்றுவதற்காக, வருமான வரித்துறை அதிகாரிகள் நாடு முழுவதும் பரவலாக அதிக அளவில் ரெய்டு நடத்தத் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகளிடமிருந்து தங்களைக் காப்பாற்றுமாறு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோருக்கு ஆடிட்டர்கள் அமைப்பு கடிதம் எழுதியுள்ளது.

வருமான வரித் துறை ரெய்டு 

நடப்பு 2018-19-ம் நிதியாண்டு மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில்,  நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் மார்ச் 27-ம் தேதி வரை 85.1 சதவிகித தொகை மட்டுமே வசூலாகி உள்ளதாகவும், வருமான வரி வசூல் பணியில் மெத்தனமாக இருக்காமல், இலக்கை அடைவதற்காக உடனடி நடவடிக்கையில் இறங்குமாறும் வருமான வரித் துறையின் முதன்மை ஆணையர்களுக்கு மத்திய நேரடி வரிகள் வாரியம் (Central Board of Direct Taxes - CBDT) மிகக் கண்டிப்புடன், இரு தினங்களுக்கு முன்னர் கடிதம் எழுதியிருந்தது. 

இதைத் தொடர்ந்து அதிகாரிகள் நாடு முழுவதும் பரவலாக ஆங்காங்கே வரி ஏய்ப்பு நடந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கும் இடங்களில் அதிரடி சோதனைகளை நடத்தி வருகின்றனர். வரும் நாள்களில் இந்தச் சோதனை இன்னும் தீவிரமாகலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.  

இந்த நிலையில், பெரும் பணக்காரர்கள், தொழிலதிபர்கள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பெரிய அளவிலான பணப் பரிவர்த்தனைகளை உடையவர்களின் வரவு செலவு கணக்குகளைக் கவனித்து வரும் ஆடிட்டர்கள் எனப்படும் சார்ட்டட் அக்கவுன்டன்ட்கள் (தணிக்கையாளர்கள்) அமைப்புகள், இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளது. 

அதில், ``வரி வசூல் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மத்திய நேரடி வரிகள் வாரியம், கள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருப்பது பரவலாக பீதியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அநாவசியமான அல்லது தேவையற்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டாம் என மத்திய நேரடி வரிகள் வாரியத்துக்கும், களத்தில் பணியாற்றும்  அதிகாரிகளுக்கும் அறிவுறுத்துங்கள்.

அருண் ஜெட்லி - மோடி

வரியை வசூலிக்க அல்லது வரி பாக்கியை வசூலிக்க சட்டப்படி என்ன விதிமுறைகள் உள்ளனவோ அந்த விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் " என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். 

``இதுபோன்ற தேவையற்ற மற்றும் கடுமையான நடவடிக்கைகள் எப்போதுமே வரி செலுத்துபவர்களுக்கு இறுதியில் மன அழுத்தத்தை ஏற்படுத்தி துயரத்தைத்தான் தரும். மேலும், இதுபோன்ற நடவடிக்கைள், வரிச் செலுத்துபவர்களுக்கு இணக்கமான அரசாக இருக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் குறிக்கோளுக்கு மாறானதாகவும் அமைந்து விடும்" என்றும் அவர்கள் அதில் கூறியுள்ளனர். 

இந்தக் கடிதத்தை பாம்பே சார்ட்டட் அக்கவுன்டன்ட்ஸ் சொசைட்டி மற்றும் சார்ட்டட் அக்கவுன்டன்ட்ஸ் அசோசியேஷன் அகமதாபாத், சார்ட்டட் அக்கவுன்டன்ட்ஸ் அசோசியேஷன் சூரத், கர்நாடகா ஸ்டேட் சார்ட்டட் அக்கவுன்டன்ட்ஸ் அசோசியேஷன் மற்றும் லக்னோ சார்ட்டட் அக்கவுன்டன்ட்ஸ் சொசைட்டி ஆகிய அமைப்புகள் கூட்டாக சேர்ந்து வெளியிட்டுள்ளன. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க