படுக்கையில் சிறுநீர் கழித்த சிறுவன்... கொடூரமாக தாக்கப்பட்ட அண்ணன்... அம்மாவின் நண்பரின் குரூரச் செயல் | 7 year old boys brutally attacked in Kerala by Mother's lover

வெளியிடப்பட்ட நேரம்: 17:06 (30/03/2019)

கடைசி தொடர்பு:17:07 (30/03/2019)

படுக்கையில் சிறுநீர் கழித்த சிறுவன்... கொடூரமாக தாக்கப்பட்ட அண்ணன்... அம்மாவின் நண்பரின் குரூரச் செயல்

மூன்றரை வயது சிறுவன் படுக்கையில் சிறுநீர் கழித்ததற்காகச் சிறுவனின் அண்ணனைக் கொடூரமாக தாக்கி மரணப்படுக்கையில் தள்ளியுள்ளார் ஒருவர்.

அருண் ஆனந்த்

இந்தச் சம்பவம் நடந்தது அண்டை மாநிலமான கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில்தான். இடுக்கி மாவட்டத்தில் உள்ள தொடுபுழா அருகே உள்ள குமாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவன் இறந்த பிறகு அவரின் உறவினர் முறைகொண்ட அருண் ஆனந்த் என்பவருடன் வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அந்தப் பெண்ணுக்கு 7 வயதில் ஒரு மகனும், மூன்றரை வயதில் ஒரு மகனும் உள்ளனர். இதற்கிடையே, நேற்று முன்தினம் அருண் ஆனந்த்தும், அந்தப் பெண்ணும் ஹோட்டலில் சாப்பிடுவதற்காக வெளியே சென்றுள்ளனர். அப்போது தன் இரு மகன்களையும் வீட்டிலேயே பூட்டி வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். சுமார் ஒன்றரை மணி நேரம் கழித்து இருவரும் உணவருந்திவிட்டு வீட்டுக்குத் திரும்பியுள்ளனர். அப்போது சகோதரர் இருவரும் உறங்கிவிட்டனர். இருவரையும் அந்தப் பெண் எழுப்ப முயன்றபோது மூன்றரை வயது சிறுவன் படுக்கையில் சிறுநீர் கழித்தது தெரியவந்தது. இதைப் பார்த்த அருண் ஆனந்த் ஆத்திரமடைந்து அவனை கழிவறைக்கு அழைத்துச் செல்லவில்லை எனக் கூறி சிறுவனின் அண்ணனைத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்துள்ளான் அந்த 7 வயது சிறுவன். 

நடந்த சம்பவம் குறித்து விவரிக்கும் போலீஸ், ``சிறுவன் சிறுநீர் கழித்ததை ஏன் சுத்தம் செய்யவில்லை என்றுக்கூறி அவரது அண்ணனைத் தாக்கியுள்ளார். முதலில் அடி வயிற்றில் மிதித்தவர், பின்னர் சிறுவனை கீழே தூக்கி வீசியும், சுவர் மற்றும் கட்டிலின் கம்பிகளில்  தலையையும் முட்ட வைத்து கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் சிறுவனின் மூளைக்குச் செல்லும் ரத்தம் முழுவதுமாக நின்றுவிட்டது. தலையில் ரத்தக் காயங்கள் ஏற்பட்டு ரத்தம் வீடு முழுவதும் சிந்தியுள்ளது. இதைத் தடுக்க வந்த அவனின் தாயையும் அருண் தாக்கியுள்ளார். சிறுநீர் கழித்த அந்த மூன்று வயது சிறுவனையும் அவர் விட்டுவைக்கவில்லை. தாக்குதலில் அந்தச் சிறுவனுக்கும் பல் உடைந்துள்ளது. கொடூரத் தாக்குதலில் ஈடுபட்டுள்ள அருண் ஆனந்தை கைது செய்து வாக்குமூலம் வாங்கியுள்ளோம். அந்தச் சிறுவர்களின் தாயிடமும் வாக்குமூலம் வாங்கியுள்ளோம். இந்த விவகாரத்தில் துரித நடவடிக்கை எடுத்து வருகிறோம்" எனக் கூறியுள்ளனர். 

அருண் ஆனந்த்

தாக்குதல் நடத்தப்பட்ட 50 நிமிடங்களுக்குப் பிறகே சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். தொடுபுழா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரைப் பரிசோதித்த மருத்துவர்களிடம் கட்டிலில் இருந்து கீழே விழுந்துவிட்டார் என அந்தப் பெண் கூற, விளையாடும்போது ஆக்ஸிடென்ட் நடந்துவிட்டது என அருண் ஆனந்தும் கூறியுள்ளார். இருவரும் மாற்றி மாற்றிக் கூறுவதில் சந்தேகமடைந்த மருத்துவர்கள் இந்தச் சம்பவம் குறித்து போலீஸிடம் தெரிவித்துவிட்டனர். அதேநேரம் சிறுவனின் உடல்நிலை மோசமாக இருப்பதை உணர்ந்த மருத்துவர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் எனக் கூறி ஆம்புலன்ஸ்க்கு போன் செய்துள்ளனர். ஆம்புலன்ஸ் வந்த நேரத்தில் போலீஸும் அங்கு வர ஆம்புலன்ஸில் ஏறுவதற்கு மறுத்துள்ளார் அருண் ஆனந்த். இருப்பினும் அவரை வற்புறுத்தி ஆம்புலன்ஸில் ஏறவைத்த போலீஸார் அவரை கண்காணிக்குமாறு மருத்துவக்கல்லூரி போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

ஆம்புலன்ஸ் சென்ற பிறகு அவர்களின் வீட்டுக்குச் சென்ற தொடுபுழா போலீஸார், அங்கிருந்த மூன்றரை வயது சிறுவனிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்தச் சிறுவன் நடந்த சம்பவத்தை விளக்க போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக மருத்துவமனை விரைந்த போலீஸார் அங்கு வைத்து அருண் ஆனந்தை கைது செய்தனர். பின்னர் அந்தப் பெண்ணிடமும் வாக்குமூலம் வாங்கியுள்ளனர். ``இந்த கொடூரத் தாக்குதலில் பலத்த காயமடைந்த 7 வயது சிறுவனுக்கு மூளைக்கு செல்லும் ரத்தம் முற்றிலுமாக நின்றுவிட்டது. கிட்டத்தட்ட அவர் மூளைச் சாவு அடைந்த நிலையில் உள்ளார். வென்டிலேட்டர் உதவியுடன்தான் இப்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் பிழைப்பது கடினம் தான்" என மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

அருண் ஆனந்த்

``தாக்குதல் நடத்திய அருண் ஆனந்த் ஒரு இன்ஜினீயரிங் பட்டதாரி. அந்தப் பெண்ணின் கணவருடைய உறவினர். அவரின் கணவர் இறந்தபிறகு சொந்த ஊருக்குச் சென்றபோது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுக் கடந்த மாதத்தில் இருந்துதான் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். இதற்கு முன்பும் இதுபோன்ற தாக்குதல்களை சிறுவர்கள் மீது நடத்தியுள்ள அருண் மீது ஏற்கெனவே கொலை உள்ளிட்ட குற்ற வழக்குகள் உள்ளன" என போலீஸார் தெரிவித்துள்ளனர். மனிதாபிமானமற்ற முறையில் இப்படி ஒரு கொடூரத் தாக்குதலை நடத்திய அருண் ஆனந்த் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேரளாவில் போராட்டங்கள் நடைபெறத் தொடங்கியுள்ளன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க