மோடிக்கு எதிராக போட்டியிடும் எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்! | BSF jawan contest against Modi

வெளியிடப்பட்ட நேரம்: 17:58 (30/03/2019)

கடைசி தொடர்பு:22:49 (31/03/2019)

மோடிக்கு எதிராக போட்டியிடும் எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்!

எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்களுக்கு தரமில்லாத உணவு வழங்கப்படுவதாக கடந்த 2017, ஜனவரி மாதத்தில் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட பி.எஸ்.எப் வீரர் தேஜ் பகதூர் யாதவை ஞாபகம் இருக்கிறதா. அவரது குற்றச்சாட்டு, இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியதோடு மத்திய அரசுக்கு தலைக்குனிவையும் ஏற்படுத்தியது. எல்லையிலிருக்கும் ராணுவ வீரர்களின் பெயரைச்சொல்லியே ஆட்சி நடத்தியும், அவர்களுக்கு சரியான உணவுகூட கொடுக்கவில்லையே என எதிர்க்கட்சிகள் கடுமையாகக் கேள்வியெழுப்பினார்கள். இதையடுத்து, உடனடியாக அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். தற்போது அவர்தான், வாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக களமிறங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

தேஜ் பகதூர் யாதவ்

மோடிக்கு எதிராகப் போட்டியிடுவதன் நோக்கம் குறித்து கூறும்போது, ``வெற்றி தோல்வி குறித்து நான் கவலைப்படவில்லை. இந்த அரசு, பி.எஸ்.எப் வீரர்களுக்காக எதுவும் செய்யவில்லை. ஆனால், வீரர்களின் பெயரைச்சொல்லி ஓட்டுக்கேட்க மட்டும் செய்கிறார்கள். மேலும், எல்லைப்பாதுகாப்புப் படையினரின் உண்மை நிலையை அம்பலப்படுத்தியதற்காக என்னை 'மனநலம் குன்றியவர்' என உயர் அதிகாரிகள் முத்திரை குத்தினார்கள்" என்று கூறினார். அவர் வெளியிட்ட வீடியோ மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டாலும் அவர் கூறியிருந்த தரமற்ற உணவுப் பிரச்னையைத் தீர்க்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தேஜ் பகதூர் யாதவ்

தேசபக்தியையும், ராணுவ வீரர்களின் தியாகத்தையும் மையமாக வைத்தே தேர்தல் பிரசாரம் செய்துவரும் பா.ஜ.க-வுக்கு, மோடிக்கு எதிராக பி.எஸ்.எப் வீரர் ஒருவர் களமிறங்கும் விவகாரம் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.