சர்ச்சையான `சௌகிதார்’ வாசகம்; பிரதமர் மோடி படம்! - ரயில்வே, விமான அமைச்சகங்களுக்கு நோட்டீஸ் | EC notice to Civil Aviation, Railways ministries on PM photo on boarding card, 'chowkidar' slogan on cups

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (30/03/2019)

கடைசி தொடர்பு:22:00 (30/03/2019)

சர்ச்சையான `சௌகிதார்’ வாசகம்; பிரதமர் மோடி படம்! - ரயில்வே, விமான அமைச்சகங்களுக்கு நோட்டீஸ்

 தேர்தல் ஆணையம்

மோடியின் புகைப்படம் மற்றும் சௌகிதார் ஸ்லோகனைப் பயன்படுத்திய ரயில்வே துறை மற்றும் விமானத்துறை அமைச்சகங்களுக்கு  மத்திய தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 11-ம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து அரசியல் கட்சிகள் பிரசாரம், தேர்தல் விதிமுறைகள் எனத் தேர்தல் களம் அனல்வீசத் தொடங்கியுள்ளது. இந்தநிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பிரதமர் மோடி தனது பெயருக்கு முன்பாக `சௌகிதார்’ எனச் சேர்த்துக் கொண்டார். சௌகிதார் என்றால் காவலன் என்று பொருள்.

பிரதமர் நரேந்திரமோடி

பிரதமர் மோடியைத் தொடர்ந்து பா.ஜ.க-வில் உள்ள முக்கிய பிரமுகர்களும் தங்களுடைய பெயருக்கு முன்பாக சௌகிதார் என்று சேர்த்துக் கொண்டனர். பா.ஜ.க-வின் தேர்தல் பிரசாரமாக இந்த வார்த்தை வைரலானது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் ரயில்வேதுறை மூலம் வழங்கப்படும் தேநீர் கோப்பைகளில் `Main bhi Chowkidar’ என்று எழுதப்பட்டிருந்தது சர்ச்சையைக் கிளப்பியது. அதேபோன்று மதுரை விமான நிலையத்தில் போர்டிங் பாசிலும் மோடியின் புகைப்படத்தை அச்சடித்துள்ளனர். இந்த விவகாரங்கள் விஸ்வரூபமெடுத்த நிலையில், இது தேர்தல் நடத்தை விதிமுறைக்கு எதிரானது என்று கூறி விளக்கமளிக்க விமான போக்குவரத்து துறைக்கும், ரயில்வே துறைக்கும் தேர்தல் ஆணையம் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கு முன்பாக, கடந்த 27-ம் தேதி ரயில்வே டிக்கெட்டில் அச்சடிக்கப்பட்டுள்ள மோடியின் புகைப்படத்தை அகற்றுமாறு தேர்தல் ஆணையம் ரயில்வே துறைக்கு கடிதம் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது