`ராகுல் காந்தியின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் இது' - வயநாட்டில் போட்டியால் கேரள காங்கிரஸ் உற்சாகம்! | Rahul gandhi contest from Wayanad in Kerala

வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (31/03/2019)

கடைசி தொடர்பு:09:48 (01/04/2019)

`ராகுல் காந்தியின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் இது' - வயநாட்டில் போட்டியால் கேரள காங்கிரஸ் உற்சாகம்!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடுவதை முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோணி உறுதி செய்தார். இதனால் தொண்டர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ராகுல் காந்தி


காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என ஒவ்வொரு மாவட்ட காங்கிரஸ் கட்சியினரும் தீர்மானம்போடுவது வழக்கம். அதே சமயம் தேசிய தலைவர்கள் வட மாநிலங்களில் போட்டியிடுவது வழக்கம். இந்த நிலையில்தான் கேரள மாநிலம் வயநாடு நாடாளுமன்ற தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என கேரள காங்கிரஸ் தலைவர்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடுவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்டது. இந்த நிலையில் வயநாட்டில் போட்டியிடுவது குறித்து ராகுல் காந்தி எந்த முடிவும் எடுக்கவில்லை என காங்கிரஸ் வட்டாரங்களில் கூறப்பட்டு வந்தது. எனவே டி.சித்திக் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அமேதி தொகுதியிலும் அடுத்தபடியாக வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிடுவதாக ஏ.கே.அந்தோணி டெல்லியில் செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார்.

ராகுல் காந்தி

 

ஏ.கே.அந்தோணி செய்தியாளர்களிடம் கூறுகையில், "மூன்று மாநில எல்லைகள் சேரும் தொகுதி வயநாடு. இங்கு ராகுல்காந்தி போட்டியிடுவதால் தேசிய அளவில் முக்கியத்துவம் பெறுகிறது" என்றார். வயநாட்டில் ராகுல் காந்தி போட்டியிடுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளதால் காங்கிரஸ் தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்த இடதுசாரிகள் மற்றும் பாஜகவுக்கு எதிராக ராகுல் காந்தியின் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் கேரள மாநில காங்கிரஸ் தொண்டர்கள் கூறி வருகின்றனர். அதேநேரம் ராகுல் காந்தியின் முடிவு தவறானது என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.