`2020 மார்ச் 31-க்குள் 22 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்!’ - ராகுல் காந்தி | Will Fill 22 Lakh Government Vacancies By March 31st 2020, says Rahul Gandhi

வெளியிடப்பட்ட நேரம்: 12:20 (01/04/2019)

கடைசி தொடர்பு:14:29 (01/04/2019)

`2020 மார்ச் 31-க்குள் 22 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்!’ - ராகுல் காந்தி

``காங்கிரஸ் கட்சி ஆட்சிப் பொறுப்பேற்றால், காலியாக இருக்கும் 22 லட்சம் மத்திய அரசுப் பணியிடங்கள் அனைத்தும் 2020-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் நிரப்பப்படும்'' என அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி கொடுத்திருக்கிறார். 

ராகுல் காந்தி

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. வரும் 11-ம் தேதி முதல் மே மாதம் 19-ம் தேதி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகின்றன. அதேபோல், தேர்தல் வாக்குறுதிகளையும் கொடுத்து வாக்குகளைக் கவரும் முயற்சியில் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. 

ராகுல் காந்தி

அந்தவகையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புதிய வாக்குறுதி ஒன்றைக் கொடுத்திருக்கிறார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், `இன்று மத்திய அரசுப் பணிகளில் 22 லட்சம் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அந்தக் காலிப்பணியிடங்கள் 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் தேதிக்குள் நிரப்பப்படும். மத்திய அரசிலிருந்து மாநில அரசுகளுக்கு சுகாதாரம், கல்வி உள்ளிட்ட துறைகளுக்காக ஒதுக்கப்படும் நிதி, இந்தக் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கும் பயன்படுத்தப்படும்’’ என்று ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார். பா.ஜ.க ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருவதாகத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.