`காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்படும்!’ - அமித்ஷா | amit sha explain bjp stand about kashmir

வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (01/04/2019)

கடைசி தொடர்பு:10:59 (02/04/2019)

`காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்படும்!’ - அமித்ஷா

க்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், தேர்தல் களம் திருவிழாக் கோலம் அடைய ஆரம்பித்துள்ளது. பெரும்பாலான கட்சிகள் தங்களின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளனர். சில மாநிலங்களில் வேட்பாளர் வேட்புமனுத் தாக்கல்களும் நிறைவடைந்துள்ளன. முக்கியச் செய்தி தொலைக்காட்சி ஒன்றில் கட்சிகளின் கொள்கை விளக்கங்கள் தொடர்பான விவாத நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்குபெற்று தங்கள் கட்சியின் நிலைப்பாட்டை விளக்கினர். சமீபத்தில் நடைபெற்ற புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு காஷ்மீர் விவகாரம் இந்திய தேர்தல் அரசியலில் முக்கிய கவனம் பெற்றுள்ளது. 

அமித்ஷா

இந்நிலையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள 35ஏ சிறப்பு அந்தஸ்து தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அமித்ஷா, ``காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு அந்தஸ்தான 35ஏ பிரிவைத் திரும்ப பெறுவதுதான் 1950 முதல் எங்களுடைய நோக்கமாக உள்ளது. தற்போது உள்ள சூழலில் சிறப்பு அந்தஸ்தைத் திரும்பப் பெற மக்களவையில் போதுமான உறுப்பினர்கள் இல்லை. வரும் 2020-ம் ஆண்டுக்குள் பா.ஜ.க-வுக்கு மக்களவையில் போதுமான பெரும்பான்மை கிடைக்கும் பட்சத்தில் அரசியலமைப்பில், காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள 35 ஏ சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறப்படும்” எனக் கூறியுள்ளார்.