`நாட்டைவிட்டு ஓடிவிட்டதாகச் சொல்வது பா.ஜ.க-வுக்குதான் பொருந்தும்!’ - விஜய் மல்லையா | vijay mallya slams BJP government

வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (01/04/2019)

கடைசி தொடர்பு:14:30 (01/04/2019)

`நாட்டைவிட்டு ஓடிவிட்டதாகச் சொல்வது பா.ஜ.க-வுக்குதான் பொருந்தும்!’ - விஜய் மல்லையா

தன்னை கடன் வாங்கிவிட்டு ஓடிவிட்டதாகப் பா.ஜ.க-வினர் தேர்தலுக்காகத் தெரிவித்து வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளார் லண்டனில் வசித்து வரும் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா. 

விஜய் மல்லையா

இந்தியாவில் உள்ள வங்கிகளில் சுமார் 9,000 கோடி ரூபாய்க்குக் கடன் வாங்கிக்கொண்டு அதைக் கட்டாமல் 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் நாட்டைவிட்டு வெளியேறினார் விஜய் மல்லையா. அதன்பின்னர் அவர் லண்டனில் வசித்து வருகிறார். மத்திய அரசு அவரை, இந்தியா கொண்டு வர கடுமையாக முயற்சிகள் மேற்கொண்டது. அதன் பலனாக லண்டன் நீதிமன்றம், அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிட்டது. அதை எதிர்த்து மல்லையா மேல்முறையீடு செய்துள்ளார். அந்த வழக்கு தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறது. 

மல்லையா

இந்த நிலையில் இந்தியாவில் பா.ஜ.க-வினர், தான் பணம் வாங்கிக் கொண்டு ஒடிவிட்டதாக கூறி வருகின்றனர் என அவர் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர், ``சமீபத்தில் இந்திய பிரதமர் மோடியின் பேட்டி ஒன்றைப் பார்த்தேன். அதில் அவர், நான் ரூ. 9000 கோடி கடன் பெற்றுள்ளதாகவும், ஆனால், இந்திய அரசு 14,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை முடக்கியுள்ளதாகவும் கூறியுள்ளார். 

கடன் வாங்கியதைவிட அதிகமான மதிப்புகொண்ட சொத்துகளை முடக்கியுள்ளதாக பிரதமரே ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால், பா.ஜ.க செய்தித் தொடர்பாளர்கள் தொடர்ச்சியாக நான் பணத்தைப் பெற்றுக்கொண்டு ஒடிவிட்டதாக கூறிவருகின்றனர். உண்மையில் நான் 1992 -ம் ஆண்டு முதலே லண்டனில் வசித்து வருகிறேன். ஓடிவிட்டதாகப் சொல்வது, பா.ஜ.க வுக்குதான் பொருந்தும்” என்றார்.