`முதலில் ஏதோ கூறினான், பிறகு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டான்!'- ஸ்விக்கி டெலிவரி பாயால் பெண் அதிர்ச்சி | bangalore Woman abused by Swiggy delivery boy

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (01/04/2019)

கடைசி தொடர்பு:16:11 (01/04/2019)

`முதலில் ஏதோ கூறினான், பிறகு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டான்!'- ஸ்விக்கி டெலிவரி பாயால் பெண் அதிர்ச்சி

பெங்களூருவில், பெண்ணிடம் ஸ்விக்கி டெலிவரி பாய் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த விஷயத்தில், ஸ்விக்கி நிறுவனம் அலட்சியமாகச் செயல்பட்டதும் தெரியவந்துள்ளது. 

ஸ்விக்கி

உணவுகளை டெலிவரி செய்துவரும் ஆன்லைன் நிறுவமான ஸ்விக்கி, அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கிவருவது வாடிக்கையாகி வருகிறது. இதுவரை அந்த நிறுவனத்தின் ஊழியர்கள்மீது உணவு டெலிவரி செய்வதில்தான் புகார் கூறப்பட்டுவந்தது. இந்த நிலையில், பெங்களூருவில் பெண் ஒருவரிடம் ஸ்விக்கி டெலிவரி பாய் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். கடந்த வியாழக்கிழமை பெங்களூரூவைச் சேர்ந்த பெண் ஒருவர், ஸ்விக்கி ஆப் மூலம் உணவு ஆர்டர் செய்துள்ளார். சிறிது நேரத்தில் உணவை டெலிவரி செய்ய டெலிவரி பாய் வந்துள்ளார்.

அப்போது அந்தப் பெண்ணிடம் டெலிவரி பாய் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் பேசியுள்ள அந்தப் பெண், ``அந்த நபர் டெலிவரிக்கு வந்தபோது, முதலில் என்னிடம் ஏதோ கூறினான். அது எனக்கு சரியாகக் கேட்கவில்லை. நான் மீண்டும் என்ன என்று கேட்டபோது, என்னிடம் அவன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டான். உடனே என் உணவை அவனிடமிருந்து பிடுங்கிக்கொண்டு கதவை சாத்திவிட்டேன். அவன் கொண்டுவந்த உணவை சாப்பிட வெறுப்பாக இருந்தது. அதைத் தூக்கி வீசிவிட்டேன்" எனக் கூறியுள்ளார். 

பின்னர், தனக்கு நேர்ந்த துயரத்தை சிறிது நேரத்தில் ஸ்விக்கி நிறுவனத்தின் கஸ்டமர் கேரை தொடர்புகொண்டு முறையிட்டுள்ளார் அந்தப் பெண். முதலில், இந்தச் செயலுக்கு சாரி எனக் கூறி வருத்தம் தெரிவித்த ஸ்விக்கி நிறுவன கஸ்டமர் கேர் தரப்பு, சிறிது நேரத்தில் நடந்த சம்பவத்துக்கு இழப்பீடாக 200 ரூபாய் கூப்பன் ஒன்றை அனுப்பியுள்ளது. கஸ்டமர் கேர் தரப்பின் இந்த செயலால், அந்தப் பெண் மீண்டும் அதிர்ச்சிக்குள்ளானார். அந்த டெலிவரி பாய்க்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என தனக்கு நேர்ந்த சம்பவத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த ஸ்விக்கி நிறுவனம், அந்தப் பெண்ணிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க