ஜான்சன் & ஜான்சன் `No more tears’ பேபி ஷாம்புவில் ஆபத்தான வேதிப்பொருள்! - அரசின் அச்சுறுத்தும் ரிப்போர்ட் | Johnson & Johnson Baby Shampoo Fails Quality Test

வெளியிடப்பட்ட நேரம்: 19:49 (01/04/2019)

கடைசி தொடர்பு:19:49 (01/04/2019)

ஜான்சன் & ஜான்சன் `No more tears’ பேபி ஷாம்புவில் ஆபத்தான வேதிப்பொருள்! - அரசின் அச்சுறுத்தும் ரிப்போர்ட்

சர்வதேச அளவில், குழந்தைகள் பராமரிப்புப் பொருள்களின் முன்னணி பிராண்டாகத் திகழும் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் தயாரிப்பு, தர பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளது. இந்தச் செய்தி, தாய்மார்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜான்சன் & ஜான்சன்

இந்தியாவைப் பொறுத்தவரை, சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பேபி பவுடர் என்றாலே ஜான்சன் அண்டு ஜான்சன்தான். 2016-ம் ஆண்டு, ஹிமாலயா நிறுவனம் பேபி பவுடர் தயாரிப்பில் இறங்கியது. அதன் பின்னர், ஹிமாலயாவின் தாய்சேய் நலப் பொருள்களை மக்கள் பரவலாகப் பயன்படுத்தத் தொடங்கினர். ஆனாலும், ஜான்சன் அண்டு ஜான்சன் தயாரிப்புகளின் மவுசு குறையவில்லை. பிறந்த குழந்தைகளைப் பார்க்க வரும் உறவினர்களும் நண்பர்களும், Johnson's Baby Kit வாங்கி கிஃப்ட்டாகக் கொடுப்பது வழக்கம். இந்தியாவைவிட வெளிநாடுகளில் ஜான்சன் தயாரிப்புகள் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளன. அதே சமயம், ஜான்சன் தயாரிப்புகளில் நம்பகத்தன்மை இல்லை என்றும், அவற்றில் புற்றுநோய் உருவாக்கும் வேதிப் பொருள்கள் உள்ளன என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், தற்போது ராஜஸ்தான்  மாநில மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பின் திடுக்கிடும் பரிசோதனை முடிவை மாநில மருந்துகள் கண்காணிப்பு அமைப்பு வெளியிட்டுள்ளது.  

ஜான்சன் & ஜான்சன்

ராஜஸ்தான் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு, ஜான்சன்& ஜான்சனின் No more tears பேபி ஷாம்பு மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளது. செப்டம்பர் 2021 ஆம் ஆண்டு காலாவதி ஆகும் மாதிரிகளைச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அவை அனைத்தும் ஹிமாச்சல பிரதேசம், பட்டியில் உள்ள ஜான்சன் & ஜான்சன் ஆலைகளில் தயாரிக்கப்பட்டவை. ஒரு லட்சம் மாதிரிகள் அடங்கிய பெட்டியில் சில மாதிரிகளைப் பரிசோதனை செய்ததில் அவற்றில் தீங்கு விளைவிக்கும் ஃபார்மால்டிஹைட் உள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஃபார்மால்டிஹைட் என்பது  கட்டடப் பொருள்கள் தயாரிக்கப் பயன்படக் கூடிய வேதிப் பொருள். இதைத் தொடர்ந்து பயன்படுத்தினால், புற்றுநோயை உருவாக்கக் கூடியதாகும். இதனால்,  தரப் பரிசோதனையில் ஜான்சன் & ஜான்சன் பேபி ஷாம்பு தோல்வியடைதுள்ளதாக, மார்ச் 5 -ம் தேதி பதிவான பரிசோதனை முடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஜான்சன் & ஜான்சன் செய்தித் தொடர்பாளர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்துள்ளார்.  “இந்த இடைக்கால ஆய்வு முடிவுகளை ஏற்றுக்கொள்ள மாட்டோம். அரசாங்கம் எந்த முறையில் சோதனை செய்தது என்பதை குறிப்பிடவேயில்லை. எங்கள் தயாரிப்புகள் பாதுகாப்பானவை. அரசாங்கத்தின் இந்த ஆய்வு முடிவுகள் இடைக்காலத்திற்கானவை. ஆய்வுகள் தெளிவாக இல்லை. எங்கள் தயாரிப்புகளில் ஃபார்மாடிஹைட் சேர்க்க மாட்டோம் என்று இந்திய அரசுக்கு உத்தரவாதம் கொடுத்துள்ளோம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவில் ஜான்சன் அன்டு ஜான்சன் பவுடர் பயன்படுத்தி புற்றுநோய் உண்டானதாக அந்நிறுவனம் மீது ஆயிரக்கணக்கான வழக்குகள் இன்னமும் நிலுவையில் உள்ளன. ஒவ்வொரு முறையும் நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்துகொண்டே இருக்கிறது ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம். ஆனால், இன்றுவரை இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கவில்லை.  குழந்தைகளின் மென்மையான சருமத்துக்கு பயன்படுத்தப்படும் பொருள்களை மிகவும் கவனமாகத் தேர்வுசெய்யவேண்டியது பெற்றோரின் கையில்தான் இருக்கிறது. ஜான்சன் & ஜன்சன் பவுடர், ஷாம்பு போன்ற பொருள்களுக்கு மாற்றாக, நம் முன்னோர்கள் இயற்கைப் பொருள்களைப் பயன்படுத்தியிருப்பார்கள். உங்களுக்குத் தெரிந்த இயற்கைப் பொருள்களை இங்கே கமென்ட்டில் குறிப்பிடலாம்!   

நீங்க எப்படி பீல் பண்றீங்க