பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியபோது அபிநந்தன் தன் மனைவியோடு பேசியது என்ன? | Abhinandan conversation with his wife, while he was in Pakistan custody

வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (02/04/2019)

கடைசி தொடர்பு:12:52 (02/04/2019)

பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியபோது அபிநந்தன் தன் மனைவியோடு பேசியது என்ன?

பாகிஸ்தான் ராணுவத்திடம் இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் சிக்கியிருந்தபோது அவருக்கும் அவரின் மனைவிக்கும் இடையில் நடந்த உரையாடல் குறித்து தெரியவந்துள்ளது. பாகிஸ்தான் ராணுவத்திடம் அபிநந்தன் சிக்கியபோது அவரை மனரீதியாகத் துன்புறுத்தி, தாக்குதல் திட்டம் குறித்து தெரிந்துகொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 

அபினந்தன்

அவர் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியது தெரிந்ததுமே, அவரை விடுவிக்கக்கோரி இந்தியா மற்றும் உலக நாடுகளிலிருந்து குரல்கள் வலுத்தன. இதையடுத்து, அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் நல்லவிதமாக நடத்துவதாகக் காட்டுவதற்காக அவர் டீ குடித்தபடி விசாரணையில் கலந்துகொண்ட வீடியோ வெளியிடப்பட்டது. அடுத்ததாக, அபிநந்தனை அவரின் மனைவியுடன் செல்பேசி மூலம் பேசவைத்து ஏதேனும் தகவல்களைத் திரட்ட பாகிஸ்தான் உளவு அமைப்பு முயற்சி செய்தது.

அபிநந்தனின் மனைவி தன்வி மார்வா, முன்னாள் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் பைலட் ஆவார். அவருக்கு சவுதி அரேபிய செல் நம்பரிலிருந்து செல்பேசி அழைப்பு வந்திருக்கிறது. அதில் அபிநந்தனின் குரலைக் கேட்டதுமே பாகிஸ்தான் புலனாய்வுப் பிரிவினரின் பிடியிலிருந்துதான் பேசுகிறார் என யூகித்துக்கொண்டார். அபிநந்தனிடம் வழக்கமான நலம் விசாரிப்புகளுக்குப்பின், ``அப்பா எங்கே எனக் கேட்கும் நம் பிள்ளைகளிடம் என்ன சொல்ல" என்று கேட்டிருக்கிறார். அதற்கு அபிநந்தன், ``அப்பா ஜெயிலில் இருக்கிறார் என்று சொல்" எனக்கூறியுள்ளார். இப்படிச்சென்ற அவர்களின் உரையாடலில், உணர்ச்சிகரமான தருணத்துக்கு இடையிலும் நகைச்சுவையுணர்வுடன் ``நீங்க குடித்த டீ எப்படியிருந்தது" என அவரின் மனைவி கேட்கிறார். அதற்கு அபிநந்தன் ``நன்றாக இருந்தது" என்கிறார். திரும்ப தன்வி, ``நான் போடும் டீயைவிட நன்றாக இருந்ததா" என்று கேட்கிறார். அதற்கு அபிநந்தன் ``ஆம், நன்றாகவே இருந்தது" என்கிறார். உடனே தன்வி, ``அப்படியானால் அந்த ரெசிப்பியைக் கேட்டுட்டு வாங்க!" என நகைச்சுவையாகக் கூறுகிறார்.

அபினந்தன்

பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில் சிக்கிய அபிநந்தனின் மன உறுதியைச் சிதைக்கும் முயற்சியில் பாகிஸ்தான் புலனாய்வுப்பிரிவினர் ஈடுபட்டிருப்பார்கள் என்று தெரியும். எனவே, அவரது மன உறுதியை அதிகரிக்கும்விதமாக, தானும், பிள்ளைகளும் தைரியமாக இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்துவதற்காக, மன உறுதியுடனும், நகைச்சுவை உணர்வுடனும் அவரின் மனைவி உரையாடியதாகத் தெரிகிறது.

 

News Courtesy: The Print