`ஹலோ ஆப்'பின் 11,000 அரசியல் விளம்பரங்கள் நீக்கம்!- ஃபேஸ்புக் அதிரடி | Facebook removed 11,000 political ads by Helo

வெளியிடப்பட்ட நேரம்: 19:15 (02/04/2019)

கடைசி தொடர்பு:10:39 (03/04/2019)

`ஹலோ ஆப்'பின் 11,000 அரசியல் விளம்பரங்கள் நீக்கம்!- ஃபேஸ்புக் அதிரடி

சமூக வலைதளங்களில் பரப்பப்படும் போலிச் செய்திகள், பிரசாரங்களைத் தடுக்கும்படி, அவற்றின் தலைமைச் செயல் அதிகாரிகளுக்கு நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிவுறுத்தியிருந்தது. அதன்படி, நேற்று (ஏப்ரல் 1) ஒரே நாளில் பல்வேறு அதிரடிகளில் ஃ பேஸ்புக் நிறுவனம் இறங்கியது.

பேஸ்புக்

முதல் அதிரடியாக, பிரதமருக்கு எதிரான அவதூறு பரப்புவதாக, குஜராத் காங்கிரஸ் கட்சி ஐடி விங் ஆதரவாளர்களின் 687 ஃபேஸ்புக் பக்கங்களை ஃபேஸ்புக் நிறுவனம் முடக்கியுள்ளது. அரசின் திட்டங்கள், பா.ஜ.க வேட்பாளர்கள் மற்றும் அதன் கொள்கைகள் குறித்து அவதூறு பரப்புவதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து, இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

ஆனால், இந்த நடவடிக்கை குறித்து காங்கிரஸ் தலைமையின் ட்விட்டர் பதிவில், காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வமான ஃபேஸ்புக் பக்கங்கள் எதுவும் முடக்கப்படவில்லை. அதேநேரம், ஃபேஸ்புக் நிறுவனம் முடக்கியுள்ள பக்கங்கள் குறித்த விவரங்களை வெளியிட வேண்டுமென்று கூறியுள்ளது.

சீனாவைச் சேர்ந்த ஹலோ ஆப் மூலம் அரசியல் கட்சித் தலைவர்களின் உருவங்களில் மாற்றங்கள் செய்து, நாட்டின் முக்கியப் பிரச்னைகளை மையப்படுத்தி விளம்பரங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. இவற்றில் 11,000 விளம்பரங்களை, நேற்று ஒரே நாளில் ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது. இந்த விளம்பரங்களை உருவாக்குவதற்காகச் செலவிடப்பட்ட தொகை தோராயமாக 7.7 கோடியாகும். விகோ வீடியோ நிறுவனத்தின் 49 அரசியல் விளம்பரங்களும் நீக்கப்பட்டுள்ளன.   

சமூக வலைத்தளம்

அடுத்ததாக, போலியான செய்திகளைப் பரப்புவதாக  200-க்கும் மேற்பட்ட பா.ஜ.க ஆதரவு ஃபேஸ்புக் பக்கங்களும் முடக்கப்பட்டன. குஜராத்தைச் சேர்ந்த சில்வர் டச் நிறுவனம், பா.ஜ.க-வுடன் நெருக்கமாகச் செயல்பட்டுவருகிறது. இதன்மூலம், போலியான செய்திகள் தயாரிக்கப்பட்டு பரப்பப்படுவது தெரியவந்ததால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவற்றில், 'தி இந்தியன் ஐ' என்ற பா.ஜ.க ஆதரவு முகநூல் குழுமம் முக்கியமானதாகும். அதில், மொத்தம் 26 லட்சம் பயனாளர்கள் இருக்கிறார்கள். இந்த சில்வர் டச் நிறுவனம்தான் பிரதமர் மோடிக்காக பிரத்யேகமான 'நமோ ஆப்' என்ற அப்ளிகேஷனைத் தயாரித்துள்ளது.