ஒரு விரல் புரட்சிக்குத் தெரியாத ஜனநாயக ரகசியங்கள்! ஏதென்ஸின் குடவோலை முறையின் அம்சங்கள் என்ன? - பகுதி - 3 | The importance of voting... A historical analysis! Part 3

வெளியிடப்பட்ட நேரம்: 12:20 (03/04/2019)

கடைசி தொடர்பு:12:20 (03/04/2019)

ஒரு விரல் புரட்சிக்குத் தெரியாத ஜனநாயக ரகசியங்கள்! ஏதென்ஸின் குடவோலை முறையின் அம்சங்கள் என்ன? - பகுதி - 3

ஏதென்ஸின் மக்களாட்சி முறையில் குடவோலை முறை போன்று 'குலுக்கலில்' தேர்ந்தெடுக்கும் முறையோடுகூட, வாக்குகள் மூலம் தேர்ந்தெடுக்கும் முறையும் நிலவியது. ஆனால், வாக்குகள் மூலம் தேர்ந்தெடுக்கும் முறை ஒருசில பொறுப்புகளுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது.

ஒரு விரல் புரட்சிக்குத் தெரியாத ஜனநாயக ரகசியங்கள்! ஏதென்ஸின் குடவோலை முறையின் அம்சங்கள் என்ன? - பகுதி - 3

சோழர் காலத்து குடவோலை முறையில் சொத்துடைமை வரையறையும், சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே ஆட்சி அதிகாரத்தில் பங்குபெற முடியும் என்ற வரையறையும் இருந்ததைப் போலவே ஏதென்ஸில் நிலவிய மக்களாட்சி முறையிலும், பெண்களும் அடிமைகளும் ஆட்சி அதிகாரத்தில் பங்குகொள்வதிலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்தனர். அவ்வாறான எதிர்மறையான அம்சம் நிலவியது என்பதைக் கவனத்தில் குறித்துக்கொண்டு அதன் சாதகமான அம்சங்களைப் புரிந்துகொள்ள முயல வேண்டும். 

ஒரு விரல் புரட்சி

இந்தத் தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்...

ஏதென்ஸ் ஜனநாயகத்தின் ஆதாரமாக இரண்டு அடிப்படைக் கொள்கைகள் இருந்தன. முதலாவது, தமது அரசியல் உரிமைகளைச் செயல்படுத்த அனைத்துக் குடிமக்களுக்கும் சம உரிமை (கிரேக்க மொழியில் isonomia). இரண்டாவது, மக்கள் சபையில் பேசுவதற்கும், தமது கருத்துகளையும் ஆலோசனைகளையும் முன்வைப்பதற்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் மறுக்கப்பட முடியாத உரிமை (isogoria). 

ஏதென்ஸின் மக்களாட்சியின் தனித்துவம் மிக்க அமைப்பாக இருந்தது மக்கள் சபை. மாதத்துக்கு மூன்று அல்லது நான்கு முறை கூடியது இந்த மக்கள் சபை. இச்சபையில்தான் 20 வயதுக்கு மேற்பட்ட ஏதென்ஸின் குடிமக்கள் அனைவருக்கும் தம் கருத்துகளையும் ஆலோசனைகளையும் முன்வைக்கும் உரிமை இருந்தது. அவ்வாறு பேச முன்வருவோரை ஏதென்ஸின் மக்கள், `விருப்பத்துடன் முன்வருவோர்' என்று குறிப்பிட்டனர். என்றாலும், மக்கள் சபையில் எல்லாக் குடிமக்களும் பேச முன்வந்துவிடவில்லை. ஏதென்ஸின் மக்கள்தொகை அக்காலத்தில் 30,000-லிருந்து அதிகபட்சமாக 60,000 வரை இருந்தது. இவர்களிலிருந்து ஏறத்தாழ 6,000 பேர் மட்டுமே மக்கள் சபை கூட்டங்களில் கலந்துகொண்டனர். இவர்களில் அரசியலிலும் நிர்வாகத்திலும் ஆட்சி புரிவதிலும் விருப்பம் இருந்த சிலர் மட்டுமே சபையின் முன் பேசவும் ஆலோசனைகளை முன்மொழியவும் செய்த ``விருப்பத்துடன் முன்வருவோராக” இருந்தனர். பெரும்பாலான மக்கள், வாதப் பிரதிவாதங்களைக் கவனிப்பவர்களாகவும், அவற்றின் முடிவில் தமது ஒப்புதலையோ, மறுப்பையோ வாக்குகள் மூலம் தெரிவிப்பவர்களாகவுமே இருந்தனர். 

தேர்தல்

ஏதென்ஸின் மக்களாட்சி முறையில் குடவோலை முறை போன்று ``குலுக்கலில்” தேர்ந்தெடுக்கும் முறையோடுகூட, வாக்குகள்மூலம் தேர்ந்தெடுக்கும் முறையும் நிலவியது. ஆனால், வாக்குகள்மூலம் தேர்ந்தெடுக்கும் முறை ஒருசில பொறுப்புகளுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. குறிப்பாக படைத் தளபதிகள், ராணுவ நிதிக்கான பொருளாளர், நிதிநிலை கணக்குத் தணிக்கையாளர் போன்ற முக்கியப் பதவிகளுக்கு மட்டுமே வாக்குகள்மூலம் தேர்ந்தெடுக்கும் முறை ஒதுக்கப்பட்டிருந்தது. இவ்வாறான பதவிகளுக்குப் போட்டியிட்டவர்கள் பெரும்பாலும் ஏதென்ஸ் சமூகத்தின் மேட்டுக் குடியினராகவே இருந்தனர். 

இவை தவிர்த்து, மேலே குறித்துள்ளதுபோல, மக்கள் சபை போன்ற அமைப்புகளில் நடைபெற்ற வாதப் பிரதிவாதங்களின் முடிவில் தமது ஒப்புதலையோ, மறுப்பையோ தெரிவிக்கக் கைகளை உயர்த்தி வாக்களிக்கும் முறை நிலவியது. பெரும்பாலும், இந்த வாக்களிப்பில் உயர்த்தப்பட்ட கைகள் எண்ணப்படும் வழக்கம்கூட இருந்ததில்லை. கூடியிருந்த 6,000 பேர்களில் எத்தனை பேர் கைகளை உயர்த்தினார்கள் என்று எண்ணிக்கொண்டிருப்பது சலிப்பிற்குரியது என்பதால் மட்டுமல்ல. ஏதென்ஸ் மக்கள் வாக்குகள்மூலம் தேர்ந்தெடுக்கும் முறையைச் சமூகத்தின் மேட்டுக்குடியினருக்கே உரிய முறையாகவும், அவர்களுக்குச் சாதகமான முறையாகவுமே கண்டனர். ஆகையால், பதவிகளுக்கும் பொறுப்புகளுக்கும் நபர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையாக அதைப் பின்பற்றுவதைத் தவிர்த்தனர்.  

மக்கள் சபை தவிர்த்து, ஏதென்ஸின் மக்களாட்சியில் மூன்று முக்கிய அரசியல் அமைப்புகள் செயல்பட்டன. முதலாவது, ஐநூறுவர் மன்றம். மக்கள் சபையில் கூடிய 6,000 பேரிலிருந்து 500 பேர் கொண்ட மன்றமே ஐநூறுவர் மன்றம் என்று அழைக்கப்பட்டது. 

இந்த 500 நபர்களில் ஏதென்ஸ் நகரத்தின் 139 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு அவற்றின் மக்கள்தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டிருந்தது. குலுக்கல் முறையிலேயே இந்த 500 பேரும் தேர்வுசெய்யப்பட்டனர். இவர்களுடைய பதவிக்காலம் ஒரு வருடம் மட்டுமே. ஒருவர் இரண்டு முறை மட்டுமே இம்மன்றத்துக்குத் தேர்வு செய்யப்படலாம் என்றும் வரையறுக்கப்பட்டிருந்தது. 30 வயதிற்கு மேற்பட்டவர்களே இம்மன்றத்துக்குத் தேர்வுசெய்யப்பட்டனர். ஐநூறுவர் மன்றம் கூடிய நாள்களில், அதன் உறுப்பினர்களுக்கு ஊதியமும் அளிக்கப்பட்டது.  

விழிப்புணர்வு

வெளியுறவுத் துறை விவகாரங்கள், ராணுவத்தின் நிர்வாகம், நிதி நிர்வாகம் மற்றும் பொது நிர்வாகம் ஆகியவை இந்த மன்றத்தின் பொறுப்பில் இருந்தன. இவை தவிர, மக்கள் சபையின் நிகழ்ச்சி நிரலைத் தயாரிக்கும் பொறுப்பும், அதில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை நிறைவேற்றும் பொறுப்பும் ஐநூறுவர் மன்றத்தின் முக்கியப் பணிகளாக இருந்தன. நடைமுறையில் பாதியளவு தீர்மானங்களே ஐநூறுவர் மன்றத்தால் முன்மொழியப்பட்டன. பாதியளவு தீர்மானங்கள் மக்கள் சபையில் கூடியோரால் முன்மொழியப்பட்டன. 

ஏதென்ஸ் நகரின் மிக முக்கியமான அரசியல் நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொண்ட குழு, வாக்களிக்கும் முறையால் அல்ல, குடவோலை முறையை ஒத்த குலுக்கல் முறையால் தேர்ந்தெடுக்கப்பட்டுத் திறம்படச் செயலாற்றியது என்பது இங்குக் கவனத்துக்குரியது. 

இரண்டாவது முக்கிய அரசியல் அமைப்பாகத் திகழ்ந்தது, மக்கள் நீதிமன்றங்கள். 30 வயதுக்கு மேற்பட்ட, அனுபவத்தில் முதிர்ந்தவர்கள் எனக் கருதப்பட்ட, தாமாகச் செயல்பட முன்வந்தவர்களிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் 6,000 பேர் இம்மன்றத்துக்குக் குலுக்கல் முறையில் தேர்வுசெய்யப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், மக்கள் சபை மற்றும் ஐநூறுவர் மன்றத்தின் தீர்ப்பாணைகளுக்குக் கட்டுப்பட்டும், சட்டத்தால் வரையறுக்கப்பட்டிருக்காத விஷயங்களில் நியாய உணர்வுடனும், வழக்காடுபவர்களுக்குப் பாரபட்சமற்ற முறையில் வாய்ப்பளித்தும் நடப்பதாக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். 

இந்த மக்கள் நீதிமன்றங்கள் கூடும் நாள்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் நீதிமன்ற வளாகத்துக்கு முன்பாக கூடிவிடுவார்கள். அவர்கள் மத்தியிலிருந்து வழக்குகளின் தீவிரத் தன்மைக்கு ஏற்ப 501, 1,001, 1,501 நபர்கள் அடங்கிய நீதிபதிகளின் குழுக்கள், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு வழக்குகளின் விசாரணை நடைபெறும்.

மக்கள் நீதிமன்றங்கள், தனிப்பட்ட நபர்களுக்கு இடையிலான பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக மன்றங்களாகச் செயல்படவில்லை என்ற விஷயம் இதில் முக்கியமானது. இவை விசாரித்த வழக்குகள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவையாகவே பெரும்பாலும் இருந்தன. குறிப்பாக, மக்கள் சபையால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், தீர்ப்பாணைகள் மற்றும் சட்டங்களை மறுபரிசீலனை செய்யும் மன்றங்களாகச் செயல்பட்டன. இதன்மூலம், மக்கள் சபையில் ஒருவேளை தவறான சட்டம் இயற்றப்பட்டிருந்தால், அதைச் சரி செய்வதற்கான கண்காணிப்பு அமைப்பாக இந்நீதிமன்றங்கள் செயல்பட்டன எனலாம். 

குடவோலை மாதிரிக் காட்சி

படைத் தளபதிகளின் குற்றங்களையும், இம்மக்கள் நீதிமன்றங்கள் விசாரித்தன. அத்தகைய வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகள் மிகக் கடுமையானவையாகவும் இருந்தன. குடியுரிமையைப் பறிப்பது, நாட்டைவிட்டு வெளியேற்றுவது போன்ற தண்டனைகள், குற்றம் இழைத்த படைத்தளபதிகளுக்கு வழங்கப்பட்டன. அவ்வகையில், ஏதென்ஸ் நகரின் மேட்டுக் குடியினரின் மக்களாட்சிக்கு எதிரான நடவடிக்கைகளைக் கட்டுக்குள் வைத்திருக்கும் பணியையும் செய்தன எனலாம். 

மூன்றாவதாக, கி.மு. நான்காம் நூற்றாண்டில், ஒரு குறுகிய காலம், மேட்டுக்குடியினரால் வீழ்த்தப்பட்டு, மக்களாட்சி மீண்டும் மீட்டெடுக்கப்பட்டபோது, சட்டம் இயற்றுவதற்காகவென்றே தனித்த ஒரு மன்றம் உருவாக்கப்பட்டது. மக்கள் சபைக்கு இருந்த சட்டம் இயற்றும் அதிகாரம் நீக்கப்பட்டு, தீர்ப்பாணைகள் மட்டுமே வழங்குமாறு வரையறுக்கப்பட்டது. புதிதாக அமைக்கப்பட்ட சட்ட மன்றத்துக்கு, மக்கள் நீதிமன்றங்களின் மாதிரியிலேயே உறுப்பினர்கள் தேர்வுசெய்யப்பட்டு, சட்டங்களைத் திருத்துவது, புதிய சட்டங்களை இயற்றுவது ஆகிய பொறுப்புகள் அளிக்கப்பட்டன. 

இவை அல்லாது, மேலுள்ள மூன்று மன்றங்களின் முடிவுகளையும், மக்கள் சபையின் தீர்மானங்களையும் நிறைவேற்றுவதற்கும் மேற்பார்வை செய்வதற்கும் என்றே தனியாக அதிகாரிகளும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் 600 பேர் குலுக்கல் முறையிலும், 100 உயர் அதிகாரிகளை தேர்தல் முறையிலும் ஆண்டுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் ஒரு பதவிக்கு ஒரு முறைக்கு மேலாகத் தேர்ந்தெடுக்கப்படக் கூடாது என்ற வரையறுக்கப்பட்டது. மேலும், ஒரு பதவிக்காலத்தின் கணக்கு வழக்குகளை ஒப்படைத்த பிறகே, அடுத்த பதவிக்குப் போட்டியிட முடியும். அதாவது, ஒருவர் ஒரு வருடம் பதவியில் இருந்தால், அடுத்த வருடம் கணக்கு வழக்குகளைச் சமர்ப்பித்ததிலேயே கடந்துவிடும் என்பதாக இருந்தது. 

இவ்வாறாக, மிகவும் சிக்கலான, செறிவான ஒரு மக்களாட்சி முறையை ஏதென்ஸ் நகர மக்கள் மிகவும் திறம்படச் செயல்படுத்தி வந்தனர். இவை அனைத்தையும் தேர்தல் முறையில் இல்லாமல், குடவோலை முறை போன்ற குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து, நிர்வாகச் சீர்கேடுகள் நிகழாத வண்ணம், பரஸ்பர கண்காணிப்பு பொறிமுறைகளையும் உருவாக்கிச் சீராக இயக்கியும் வந்தனர். 

ஏதென்ஸ் நகரத்து மக்களின் ஆட்சியமைப்பில், குடிமக்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் அரசியல் நடவடிக்கைகளில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டனர் என்பதே அவ்வாட்சி முறையின் தனிச்சிறப்பான அம்சமாக இருந்தது. அரசியல் நடவடிக்கைகளிலும் நிர்வாகத்திலும் தாமாக முன்வந்து நேரடியாகச் செயல்பட முடியாதவர்கள்கூட, மக்கள் சபையில் பங்கேற்று, தமது முடிவுகளைத் தெரிவித்தனர். 

குடவோலை முறையில் நிலவியதைப்போலவே குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் முறையோடு, சுழற்சி முறையையும் கையாண்டதன் மூலம், அதிகாரம் தனித் திறன் படைத்த நிபுணர்களின் கரங்களிலோ, செல்வாக்கு படைத்த தலைவர்களின் கரங்களிலோ குவிந்துவிடாமல் இருப்பதை உறுதிசெய்துகொண்டனர். 

தொடரும்… 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்